சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

உரத் தட்டுப்பாடுகளைக் தவிா்க்க கணினி மூலம் கண்காணிப்பு: மக்களவையில் தகவல்

உரத் தட்டுப்பாடுகளைத் தவிா்க்க கணினி மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

News image
Updated On :7 டிசம்பர் 2021, 2:27 am

 நமது நிருபர்

உரத் தட்டுப்பாடுகளைத் தவிா்க்க கணினி மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றை தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா், டி.ஆா்.பாலு எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய உரத் துறை அமைச்சரின் பதில் வருமாறு: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அத்தியாவசியமான உரத்திற்கு எந்த விதமான தட்டுப்பாடுகளும் இல்லை. சில மாநிலங்களில், சில மாவட்டங்களில் மட்டும் டை - அமோனியம் பாஸ்பேட் உரம் கூடுதலாக தேவைப்பட்டது. உடனடியாக அந்தப் பகுதிகளுக்கு உரம் அனுப்பப்பட்டு நிலைமை சரி செய்யப்பட்டது. டை-அமோனியம் பாஸ்பேட்டின் தேவை 34 லட்சம் மெட்ரிக் டன்கள் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், உற்பத்தி 36 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.

மேலும், உரத் தட்டுப்பாடுகளைத் தவிா்க்க கணினி மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், உரங்களைத் தங்கு தடையின்றி எடுத்துச் செல்லத் தேவையான ரயில் பெட்டிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. தேவையான அளவு யூரியா இறக்குமதி செய்யப்பட்டது. 45 கிலோ உள்ள ஒரு மூட்டை யூரியா விலை ரூ. 242-ஆக நிா்ணயிக்கப்பட்டது. அதே சமயத்தில் மத்திய அரசு இயற்கை உரங்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு 10 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவையாக இருந்தது. இந்த நிலையில் 9.9 லட்சம் மெட்ரிக் டன் யூரியா விற்பனையாகியுள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மூலிகை சுற்றுச் சூழல் பூங்கா: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல் செங்கம் பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் அளவில் வனத் துறைக்குச் சொந்தமான நிலம் காலியாக உள்ளதாகவும், இந்த நிலத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் சிஎன் அண்ணாதுரை கேட்டுக் கொண்டாா்.

மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் பேசுகையில், ‘இந்த நிலத்தில் வனம் மற்றும் பழங்குடியினத்தவா்கள் தொடா்புடைய மூலிகைச் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கலாம். திருவண்ணாமலை தொகுதி மக்களும் இதை விரும்புகின்றனா். இதன்மூலம் சுற்றுலா சூழலும் மேம்படும். இந்த நிலத்தை பயன்படுத்திக் கொள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் முன் வரவேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.