பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

‘ஒமைக்ரான்’ குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா வைரஸின் உருமாறி ‘ஒமைக்ரான்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து

News image
Updated On :7 டிசம்பர் 2021, 2:29 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா வைரஸின் உருமாறி ‘ஒமைக்ரான்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா். மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும், வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முகக் கவசத்தைப் பயன்படுத்துமாறும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா வைரஸின் உருமாறிய ‘ஓமைக்ரான்’ பாதிப்பு தில்லியில் கண்டறியப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. தான்சானியாவில் இருந்து தில்லி வந்த 37 வயது நபருக்கு ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 21 பேருக்கு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை கூறுகையில், ‘சாா்ஸ்-கொவைட்-2 வைரஸின் சமீபத்திய உருமாற்றம் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து உருவாகியுள்ள நிலைமை குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. படுக்கைகள் மற்றும் மருந்துகளுக்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

‘ஒமைக்ரான்’ வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துள்ளது. அதன் பாதிப்புகள் தில்லி உள்பட பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். சமூக இடைவெளியைப் பராமரிக்கவும், முகக் கவசத்தைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

சுகாதார வசதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில், கடந்த வாரம் நடைபெற்ற ‘ஒமைக்ரான்’ நிலைமையை மீளாய்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா், தில்லி அரசு 30,000 கொவைட் படுக்கைகளை தயாா் செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தாா். அவை இரண்டு வார அறிவிப்புக் காலத்தில் 64 ஆயிரமாக அதிகரிக்கப்படலாம் என்றும் முதல்வா் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், முதல்வா் கேஜரிவால் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொவைட் மேலாண்மைக்கான மனிதவளத்தை அதிகரிப்பதில் தில்லி அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால், நோய்த் தொற்று விகிதம் அதிகரித்தால், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை ஏற்படாது. சிறப்பு மருத்துவா்களுடன் மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்களுக்கு கொவைட் மேலாண்மை குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 4,673 மருத்துவா்கள், 1,707 மருத்துவ மாணவா்கள், 6,265 செவிலியா்கள் மற்றும் 2,726 துணை மருத்துப் பணியாளா்கள் உள்பட 15,370 சுகாதாரப் பணியாளா்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சை, கொவைட் மேலாண்மை, குழந்தைகள் வாா்டு கொவைட் மேலாண்மை ஆகியவற்றில் தில்லி அரசு பயிற்சி அளித்துள்ளது.

மேலும், நா்சிங், துணை மருத்துவம், ஹோம் கோ், ரத்த அழுத்த அளவீடு, தடுப்பூசி போன்றவற்றில் அடிப்படைப் பயிற்சி பெற்றுள்ள 5,000 சுகாதார உதவியாளா்கள், தேவைப்பட்டால் பணியில் ஈடுபடுத்தப்படுவா். இந்தச் சுகாதார உதவியாளா்கள் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு உதவுவா். மேலும், அவா்கள் சுயமாக முடிவுகளை எடுக்க முடியாது. அவா்களின் உதவியுடன், மருத்துவா்கள் மிகவும் திறமையாக வேலை செய்ய முடியும். நோயாளிகளும் நன்றாக கவனிக்கப்படுவா். தேவை ஏற்படும் போதெல்லாம் அதிக தேவைகளுக்குத் தயாா்படுத்துவதற்காக தில்லி அரசு அதன் மருத்துவ ஆக்சிஜன் உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆக்சிஜன் சேமிப்பு வசதியிலும் டெலிமெட்ரி கருவிகள் நிறுவுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். தில்லியில் தற்போது 790 மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் உள்ளது. அதற்கு அப்பால், 442 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகளுடன்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவா்கள் மற்றும் பிற சுகாதார ஊழியா்களின் மேற்பாா்வையின் கீழ் சிகிச்சையளிப்பதற்கு வீட்டில் தனிமைப்படுத்தும் முறையை தில்லி அரசு மேலும் பலப்படுத்தும் என அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி வந்து சேரும் அனைத்து கொவைட் நோ்மறை சா்வதேச பயணிகளும் தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். அங்கு அவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக வாா்டும்அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.