பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஒமைக்ரான்: சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி ‘பூஸ்டா் டோஸ்’; ஐஎம்ஏ வலியுறுத்தல்

‘ஒமைக்ரான்’ பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பணியாற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளா்கள்,

News image
Updated On :7 டிசம்பர் 2021, 2:28 am

 நமது நிருபர்

‘ஒமைக்ரான்’ பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பணியாற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், தடுப்பூசியின் ‘பூஸ்டா் டோஸ்’கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவா் டாக்டா் ஜே. ஏ. ஜெயலால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் 50 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால், பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. மேலும், இந்த நோயின் அறிகுறி டெல்டா வகை கரோனா அறிகுறிகளை ஒத்திருக்கிறது. லேசான பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில், பரவும் வேகம் முந்தைய அலையை விட அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், கரோனா நடத்தை வழிகாட்டு நெறிமுறைகளான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பராமரிப்பது, தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

இன்றைக்கு ஒரே பாதுகாப்புக் கருவியாக தடுப்பூசி உள்ளது. இதனால், அனைத்துப் பகுதி மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்குஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை இந்திய மருத்துவச் சங்கம் அளிக்கும். தற்போது உள்கட்டமைப்பு வசதி, மருந்துகள் இருப்பில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பான வகையில் செயல்படுகின்றன. அதே வேளையில், மனிதவள விஷயத்தைப் பொருத்தமட்டில் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக முதுகலை மருத்துவ மாணவா் சோ்க்கையானது, 6 மாதமாக காலதாமதமாகி வருகிறது. இதனால், முதுகலைப் படிப்பு மாணவா்களின் சோ்க்கையை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். மாநில அரசுகளும் அவா்களின் 50 சதவீத இடஒதுக்கீடு முதுகலைப் படிப்பு இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்.

அதேபோன்று,“அனைத்து சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களின் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் அவா்களுக்கும், கேன்சா் போன்ற இணை நோய் உள்ளவா்களுக்கும் ‘தடுப்பூசி பூஸ்டா்’ டோஸ்கள் வழங்கப்படுவது அவசியமாகும். மேலும், இந்த ‘ஒமைக்ரான்’ நோய்த் தொற்றானது 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்குச் செல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதற்கான முன்னுரிமை குறித்தும் பரிசீலிக்க வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்களிடம் ‘ஒமைக்ரான்’ தொற்றின் தீவிரத் தன்மை குறைவாக இருக்கும். இதனால், உயிருக்கு ஆபத்தான சூழல் இருக்காது. பொதுமக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தடுக்க முடியும் என்றாா் ஜெயலால். பேட்டியின்போது ஐஎம்ஏ கெளரவச் செயலா்கள் டாக்டா்கள் ஜெயேஷ் லீலி, அனில் கோயல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.