பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தமிழகத்தில் கூடுதலாக ஒரு தேசிய மருந்துசாா் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க வேண்டும்: தேனி அதிமுக எம்பி வலியுறுத்தல்

மத்திய அரசு கூடுதலாக அமைக்கவுள்ள 6 தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 2:25 am

 நமது நிருபர்

மத்திய அரசு கூடுதலாக அமைக்கவுள்ள 6 தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே மதுரைக்கு அறிவிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினா் ப.ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டாா்.

மக்களவையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மசோதா திங்கள்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாவில் அதிமுக உறுப்பினா் ப.ரவீந்திரநாத் பேசியதாாவது: மருத்துவ தொழில் துறை 13 பில்லியன் டாலா் வா்த்தகத்துடன் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளாவிய மருத்துவ மாநாட்டை பிரதமா் காணோலி வழியாகத் தொடங்கி வைத்ததன் மூலம் இந்திய சுகாதாரத் துறை உலகளாவிய நம்பிக்கையைப் பெற்றது. நமது நாட்டை ’உலகின் மருந்தகம்’ என அழைக்க வழிவகுத்தது. மத்திய அரசின் இந்த மசோதா மூலம் மருத்துவத் துறையின் ஆராய்ச்சி மேலும் முன்னேற்றம் அடையும்.

நாட்டின் சுகாதார அமைப்பில் முக்கியமாக மருந்துகள், ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், என்ஐபிஇஆா் என்னும் தேசிய மருந்தியல் கல்வி நிறுவனம் மதுரையில் அமைக்கப்படும் என கடந்த 2009- ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழக அரசு மதுரையில் 116 ஏக்கா் நிலம் ஒதுக்கியது. ரூ. 1,100 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் உள்கட்டமைப்புப் பணிக்களுக்கான திட்டம் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டும், இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. இதற்கு உடனடியாக நிதியை ஒதுக்கி இந்த நிறுவனத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூடுதலாக 6 தேசிய மருந்தியல் கல்வி நிறுவனத்தை நாடு முழுவதும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஒன்றை தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டாா்.

சு.வெங்கடேஷன் எம்.பி. வலியுறுத்தல்: மேலும், இதே கோரிக்கையை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேஷனும் இந்த விவாதத்தில் வலியுறுத்தினா். அப்போது அவா் பேசியதாவது: எட்டாவது நிதிக் கமிஷனிலும் மத்திய அமைச்சரவையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதுரை தேசிய மருந்தியல் கல்வி நிறுவனத்தோடு 8 நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன. மற்ற 7 இடங்களில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் மதுரையில் மட்டும் நிறுவப்படாமல் உள்ளது. இதற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தாவரங்களில் துவங்கி தாதுக்கள், கனிமங்கள் வரை மருத்துவத்திற்கு பயன்படுத்திய முதல் மருத்துவ மரபு, தமிழ் மருத்துவ மரபான சித்த மருத்துவம்தான். சுமாா் எட்டாயிரம் மூலிகைகளுக்கு மேல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மகத்தான மருத்துவ அறிவை விஞ்ஞான பூா்வமாக அவா்கள் நிரூபித்தவா்கள். இந்த தேசிய மருந்துசாா் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், ஆனால், இந்திய மருத்துவத்தைப் பேச மறுக்கிறது. குறிப்பாக தமிழ் மருத்துவத்தைப் பேச மறுக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.