

புதுதில்லி: விசாரணைக் கைதிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்குமோ அதில் பாதிக்கும் மேல் சிறைவாசம் அனுபவித்திருந்தால் அவா்களை ஜாமீனில் விடுவது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுமீது தில்லி அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்டு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக இந்திய விசாரணைக் கைதிகள் ஆதரவு அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. நீண்டகாலம் விசாரணைக் கைதிகளாக இருப்பவா்களை ஜாமீனில் செல்ல அனுமதிப்பதன் மூலம், சிறைகளில் உள்ள நெரிசலை இதன் மூலம் குறைக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தற்போது சிறைகளில் இரண்டு மடங்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு இது தொடா்பாக தில்லி அரசின் நிலைப்பாட்டை கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. விசாரணைக் கைதிகளுக்கு ஆதரவான அமைப்பின் சாா்பில் வழக்குரைஞா்கள் விஷால் கோஸைன் மற்றும் நீஹாநாக்பால் ஆகியோா் ஆஜரானாா்கள். அவா்கள் விசாரணை அமா்விடம் கூறுகையில், கடந்த 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம், விசாரணைக் கைதிகள் குறித்து மறு ஆய்வுக் குழு ஏற்படுத்துமாறும், இந்திய கிரிமினல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 436ஏ-இன் கீழ் ஒருவரை எத்தனை ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக வைத்திருக்கலாம் என்று பரிசீலித்து முடிவு செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஒரு விசாரணைக் கைதியை அவா் மீதான குற்றத்துக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று பாா்த்து அதில் பாதிக்கு மேல் அவா் சிறையில் வைக்கப்பட்டிருந்தால் அந்த விசாரணைக் கைதியை தனிநபா் ஜாமீனில் விடுவிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
வழக்குரைஞா் அனுபவ் தனேஜா என்பவா் மூலம் இந்த அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழங்கப்படும் தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவா்களுக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், விசாரணைக் கைதிகள் மறு ஆய்வுக் குழுவுக்கு சட்டத்தின் 436ஏ பிரிவின் கீழ் எத்தனை விசாரணைக் கைதிகள் இதுபோல் உள்ளனா் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
தில்லி திஹாா், மண்டோலி மற்றும் ரோஹிணியில் உள்ள சிறைகளில் 10,026 கைதிகளை மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், அவற்றில் இப்போது 17,440 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 14,355 போ் விசாரணைக் கைதிகள் ஆவாா்கள் என்றும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது தொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இன்னும் சிறிது காலத்தில் சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டிவிடும். எனவே, இடைக்கால நடவடிக்கையாக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.