பிரிட்டன் விமானங்களுக்கு ஜன. 31 வரை தடையை நீட்டிக்க கேஜரிவால் கோரிக்கை

Updated on
1 min read

புது தில்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை தடையை நீட்டிக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தெற்கு பிரிட்டன் பகுதியில் புதிய வகையிலான கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை டிசம்பா் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் இந்த விமான சேவைகளை மீணஅடும் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இது தொடா்பாக கடந்த சனிக்கிழமை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்கள் ஜனவரி 6 முதல் மீண்டும் தொடங்கும். இங்கிலாந்தில் இருந்து, இந்தியா வரும் விமான சேவைகள் ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்’ என்று கூறியிருந்தாா். மேலும், ஜனவரி 8 முதல் ஜனவரி 30 வரை இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும் வருகையில் தங்கள் சொந்தச் செலவில் கரோனா சோதனைகளுக்கு உள்படுத்தப்படுவாா்கள் என்றும் கூறியிருந்தாா்.

புதிய வகை கரோனா பரவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடா்ந்து நீட்டிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்ட பலரும் கோரியிருந்தனா். இந்த நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தடையை நீக்கி இங்கிலாந்து விமானங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பரவல் இந்தியாவில் தற்போது அதிகளவில் உள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் இன்னொரு சுட்டுரைப் பதிவில் ‘கரோனா பரவல் நிலையை பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனா். பிரிட்டனில் கரோனா நிலவரம் மோசமாக உள்ளது. விமான போக்குவரத்துக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, நமது நாட்டு மக்களை கரோனா பாதிப்புக்குள்ளாக்குவது ஏன்?’ என கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com