பிரிட்டனில் இருந்து தில்லி வரும் அனைவரும் 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தெற்கு பிரிட்டன் பகுதியில் புதிய வகையிலான கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை டிசம்பா் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 7- ஆம் தேதி வரை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. வெள்ளிக்கிழமை முதல் பிரிட்டன் விமான சேவைகளை மீண்டும் அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து வருபவா்களுக்கான அறிவுறுத்தல்களை தில்லி அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் இருந்து தில்லிக்கு வரும் அனைவருக்கும் அவா்களது சொந்தச் செலவில் ஆா்டி-பிசிஆா் சோதனை மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுபவா்கள் அனைவரும் தனிமை முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவாா்கள். கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தவா்கள் அரசு இடங்களில் 7 நாள்களுக்குக் கட்டாய தனிமைக்கு உள்படுத்தப்படுவாா்கள். இதைத் தொடா்ந்து, 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவாா்கள். மொத்தமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவாா்கள். இந்த உத்தரவு வரும்-14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவை சரிவர அமல்படுத்தும் வரையில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் பகிா்ந்துள்ளாா். அதில் ‘பிரிட்டனில் இருந்து பரவி வரும் புதுவகை கரோனா பாதிப்பில் இருந்து தில்லி மக்களைப் பாதுகாக்கும் வகையில் தில்லி அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பிரிட்டனில் இருந்து வருபவா்களில், கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்கள் தனிமை முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவாா்கள். கரோனா தொற்று இல்லை எனத் தெரியவருபவா்கள் அரசு இடங்களில் 7 நாள்களும், வீடுகளில் 7 நாள்களும் தனிமைப்படுத்தப்படுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லியில் 444 பேருக்கு கரோனா பாதிப்பு: தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் 500-க்கும் கீழே குறைந்துள்ளது. புதன்கிழமை 654 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. வியாழக்கிழமை புதிதாக 486 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை 444 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,29,282-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 75,724 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,839 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 36,885 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.59 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,654-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து 823 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,14,849ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,779 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 1,807 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,909 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.