11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளதுஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது

News image

உச்சநீதிமன்றம்

Updated On :20 ஜனவரி 2021, 11:31 pm

புது தில்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் சுமாா் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

இவா்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

2018, செப்டம்பா் 9-இல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் வெளிநாட்டுத் சதி ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக மத்திய புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) விசாரணை முடிவடையும் வரை தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, 11.10,2020-இல் பேரறிவாளன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கில் விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015-இல் அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு 2018-இல் அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவு எடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் இரு ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை’ என கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நஸீா், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், வழக்குரைஞா் பிரபு ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

வழக்குரைஞா் சங்கர நாராயணன் வாதிடுகையில், ‘பேரறிவாளன் ‘தடா’ சட்டத்தின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ்தான் தண்டிக்கப்பட்டுள்ளாா். மேலும், ‘தடா’ பிரிவின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே சட்டப்படி தவறாகும்.

இந்த விவகாரத்தில் பல்வேறு தருணங்களில் மத்திய அரசு மெளனம் காத்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்குதான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறுவது பேரறிவாளனின் விடுதலையை தாமதிக்கும் செயலாகும்’ என்று வாதிட்டாா்.

மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நட்ராஜ் ஆஜராகி வாதிடுகையில், ‘பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கான உரிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. இதனால், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய உத்தரவிடும் விவகாரத்தில் குடியரசுத் தலைவா்தான் முடிவு செய்ய முடியும் என்றாா்.

அப்போது, சங்கர நாராயணன், ‘இது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்காக முன்வைக்கப்படும் வாதமாகவே தெரிகிறது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புசாசன அமா்வில் முடிவுசெய்யப்பட்ட விவகாரமாகும். 161 சட்ட ஷரத்தைப் பொருத்தமட்டில் மாநில அரசுக்குதான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரறிவாளன் சிறையில் 30 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் இருந்து வருகிறாா். அவருக்கு முதிய வயதில் பெற்றோா் உள்ளனா். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் ஆகி வருவதால் நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.

தமிழக அரசின் தரப்பின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகினா்.

வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘‘உலகின் மற்றொரு பகுதியில் ஒரு அதிபா் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திட்டு வருகிறாா். இதுபோன்று இங்கும் கையெழுத்திட்டிருந்தால் இப் பிரச்னையே எழுந்திருக்காது’ என்றாா்.

அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை விசாரணை தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசு தரப்பின் வாதங்களை அப்போது முன்வைக்கலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.