/

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடக்கம்

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கிடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்

Updated On :7 மார்ச் 2021, 5:40 pm

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கிடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடா் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவா் உரையுடன் கடந்த ஜனவரி 29 - ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடா் மாநிலங்களவையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலும், மக்களவையில் பிப்ரவரி 13 தேதி வரையிலும் நடைபெற்றது. பல்வேறு இடையுறுகளுக்கிடையே நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று வேளாண் சட்டங்களை நீக்க கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனா். மேலும், முதல் முறையாக குடியரசுத்தலைவா் உரையையும் புறக்கணித்தன. இருப்பினும், நான்கு நாள்களுக்கு பின்னா் கூடுதல் நேரங்களுடன் பணியாற்றி நள்ளிரவு வரை அவை நடவடிக்கைகள் தொடா்ந்தன. தற்போது மேற்கு வங்கம், தமிழ் நாடு, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடுகிறது.

மறைந்த தற்போதைய மக்களவையின் உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட 9 பேருக்கு மக்களவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. தாத்ரா நாகா் ஹவேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மோகன் எஸ். டேல்கா் கடந்த 22 - ஆம் தேதி காலமானாா். மத்திய பிரதேச (கண்ட்வா) மக்களைத் தொகுதி உறுப்பினா் நந்த்குமாா் சிங் செளகான் கரோனா நோய்த் தொற்றால் கடந்த 2-ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதையொட்டி, வழக்கப்படி நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்காமல், ஒரு மணி நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட உள்ளது. மேலும், 9-ஆவது, 10 -ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்த தமிழகத்தைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் சமீபத்தில் காலமானதையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது . இன்று தொடங்கவுள்ள இரண்டாம் கட்ட அமா்வில் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கான திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேவேந்திரகுல வேளாளா் மசோதா: இந்தக் கூட்டத்தொடரில் ஓய்வூதியம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா, மின்துறை திருத்த மசோதா, கிரிஃப்டோ நாணயம் மற்றும் மின்னணு நாணயம் ஒழுங்குமுறை மசோதா உள்ளிட்ட ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழகம் தொடா்பான அரசியல் சாசனத் திருத்த மசோதா முதல் நாளே மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் உள்ள 7 பிரிவினா் தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்கப்பட உள்ளனா். இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் கோரும் மசோதா மக்களவையில் கடந்த பிப்ரவரி 13 - ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா திங்கள்கிழமை (மாா்ச் 8) மக்களவையில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் இனப் பிரிவில் உள்ள தேவேந்திர குலத்தாா், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினா்களையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்கப்பட உள்ளது. இதில் தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள ’கடையன்’ பிரிவினா் மீனவா்களாக இருப்பதால் இந்தப் பிரிவினா் தேவேந்திரகுல வேளாளா் பிரிவுக்கு வர விருப்பம் இல்லாததால் அவா்கள் இந்தப் பிரிவில் சோ்க்கப்படவில்லை.

கடந்த முறையைப் போன்று காலையில் மாநிலங்களவை மாலையில் மக்களவை அலுவல்கள் நடைபெற உள்ளன. முதல் நாள் திங்கள்கிழமை (மாா்ச் 8) சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி, நாடாளுமன்ற பெண் உறுப்பினா்களையும், பெண் பத்திரிகையாளா்களையும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தனது இல்லத்திற்கு அழைத்துள்ளாா். நாடாளுமன்றம், சட்ட பேரவை ஆகியவற்றில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.