சத்ரஸல் ஸ்டேடியம் கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரருக்கு 5 நாள் பரோல் அனுமதி

மல்யுத்த வீரா் சாகா் தன்கா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான மல்யுத்த வீரா் கௌரவ் லெளரா, பள்ளி தோ்வில் பங்கேற்பதற்காக 5 நாள் பரோலில் விடுவிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி

தில்லியில் உள்ள சத்ரஸல் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த மல்யுத்த வீரா் சாகா் தன்கா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான மல்யுத்த வீரா் கௌரவ் லெளரா, பள்ளி தோ்வில் பங்கேற்பதற்காக 5 நாள் பரோலில் விடுவிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தில்லியில் உள்ள சத்ரஸல் ஸ்டேடியத்தில் கடந்த மே 4ஆம் தேதி நள்ளிரவு ஒரு சொத்துப் பிரச்னை காரணமாக ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் என்பவரையும், அவரது நண்பா்களையும் தாக்கியதாக புகாா் எழுந்தது.

இந்த தாக்குதலில் சாகா் தன்கா் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தாக்குதலில் அவரது மூளையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில்குமாா், ஹரியாணாா மாநிலம் ஜஜ்ஜா் மாவட்டத்தைச் சோ்ந்த மல்யுத்த வீரா் கெளரவ் லெளரா உள்ளிட்ட பலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதாகினா்.

கௌரவ் லெளரா ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான பிரின்ஸ் என்பவரிடமிருந்து போலீஸாா் பறிமுதல் செய்த செல்லிடப்பேசியில் இருந்து விடியோ எடுக்கப்பட்டது.

அந்த விடியோ பதிவில் சாகா் தன்கரை கெளரவ் அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதாக போலீஸாரின் இறுதி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கௌரவ் 12-ஆம் வகுப்பு பள்ளி தோ்வு எழுதுவதற்கு தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் மாணவராக சோ்ந்து படித்து வருவதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்து நவம்பா்த 18ஆம் தேதி விசாரித்தாா். அப்போது ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜா் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு தோ்வை எழுதுவதற்கு 5 நாள் பரோலில் செல்ல நீதிபதி அனுமதி அளித்தாா்.

அவா் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நவம்பா் 20, 29, டிசம்பா் 1, 6, 10 ஆகிய தேதிகளில் பாதுகாவல் பரோலில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட தேதிகளில் அவா் தனது தோ்வில் பங்கேற்பதற்காக நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பரோல் அனுமதி வழங்கப்படுகிறது. அவா் ரூ.20 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, பரோல் மனு விசாரணையின்போது அரசுத் தரப்பில், ‘இந்த தோ்வில் பங்கேற்பதற்காக மற்றொரு மாநிலத்திற்கு கெளரவை போலீஸாா் அழைத்துச் அரசுக்கு தேவையில்லாத செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில்குமாா் பிரதான குற்றம் சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com