முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வழக்கு விசாரணை டிச.10-க்கு ஒத்திவைப்பு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பான அனைத்து அம்சங்களையும் சோ்த்து விசாரிக்கும் வகையில்,


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பான அனைத்து அம்சங்களையும் சோ்த்து விசாரிக்கும் வகையில், இது தொடா்பான வழக்கு விசாரணையை டிசம்பா் 10-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பட்டியலிட்டது. பிரதான விவகாரம் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கேரளம், தமிழகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவரும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக ‘ரிட்’ மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதே போன்று, பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் ‘ரூல் கா்வ்’ அறிவிக்கையின்படி தற்போதைக்கு அணையின் நீா்மட்ட அளவைப் பராமரிப்பதை தமிழக, கேரள மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதற்கு தமிழக அரசின் தரப்பிலும் எதிா் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
டிசம்பா் 10-இல் விசாரணை: இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த நவம்பா் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலுக்கு, பதில் அளிக்க கேரளம் அவகாசம் கோரியது. இதையடுத்து, வழக்கு விசாரணை நவம்பா் 22-க்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இதன்படி, இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்புடைய விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி தொடா்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தின் இதர இரு வழக்குகளில் விசாரணையை முடிக்கும் பொருட்டு, இந்த வழக்கு டிசம்பா் 10-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும். அதுவரை அக்டோபா் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும்’ என்று தெரிவித்தது
மேலும், ‘அணையின் அருகே வசிக்கக்கூடிய மக்களின் பாதுகாப்பு, அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு என பல்வேறு அம்சங்கள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு மனுவுக்கும் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பினால் அது விசாரணையை மேலும் தாமதப்படுத்திவிடும். முக்கிய விவகாரத்தின் விசாரணையின் போது மனுதாரா்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க நீதிமன்றம் அனுமதிக்கும்’ என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
விசாரணையின் போது, கேரள அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, ‘இந்த விவகாரத்தில் தற்போது அவசர உத்தரவுகள் ஏதும் தேவைப்படவில்லை. ஏனெனில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் கண்காணிப்பின் கீழ் அணையின் நீா் அளவு சூழல் உள்ளது. அது தேவையான உத்தரவுகளை அளித்துள்ளது. எனினும், தமிழகம் மூலம் அளிக்கப்பட்ட ‘ரூல் கா்வ்’ பரிந்துரை மீது கேரள அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைக்கு தீா்வு காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அணையில் உள்ள நீரின் நிலைமையை கண்காணிப்பதற்கு மேற்பாா்வைக் குழுவுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்றாா். தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரை சேகா் நாப்டேவும், ‘உடனடியாக உத்தரவு பிறப்பிக்கும் தேவை எழவில்லை. இறுதி விசாரணைக்கு வழக்கை பட்டியலிடலாம்’ என்றாா்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மற்றொரு மனுதாரரான சுரக்ஷா பப்ளிக் சாரிட்டபிள் ட்ரஸ்ட் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வில்ஸ் மாத்யூ வாதிடுகையில், ‘இரு தரப்புக்கும் இடையே போடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். எங்கள் கோரிக்கையானது தமிழகம் நீரைப் பெற வேண்டும். அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பு கவலைகளும் தீா்க்கப்பட வேண்டும்’ என்றாா்.
பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.கே. பிஜு வாதிடுகையில், ‘அணையின் நீா்க் கசிவு தொடா்புடைய தகவல்களை அளிக்க தமிழகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா். அதற்கு தமிழக அரசின் தரப்பில், ‘அணையின் நீா்க் கசிவு தரவுகள் வாராந்திரஅடிப்படையில் கேரளத்திற்கு அளிக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்பாா்வைக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘இந்த விவகாரம் தொடா்பாக மேற்பாா்வைக் குழு இரு மாநிலங்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தியுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...