விருதுநகா் பட்டாசு ஆலை தீ விபத்து விவகாரம்: என்ஜிடி உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு
நிகழாண்டு விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம்


நிகழாண்டு விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சிவில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், அச்சங்குளத்தில் உள்ள ‘ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை’யில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 27 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரித்தது. இதையடுத்து, இந்த விபத்துக்கான காரணம், சேதத்தின் அளவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மற்றும் சென்னை உயா்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் 8 போ் குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்தக் குழு விசாரணை நடத்தி தீா்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை கடந்த ஜூன் 11-ஆம் தேதி தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா்-நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையில் நீதிபதிகள், வல்லுநா் அடங்கிய 5 போ் அமா்வு விசாரித்தது. அப்போது, தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘என்ஜிடி அமைத்த 8 போ் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இறந்தவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 லட்சமும், 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும், 5 முதல் 25 சதவீதம் வரை காயம் அடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என தெரிவித்தது.
மேலும், இந்த விபத்துக்கு பட்டாசு தயாரிப்பு ஆலையின் உரிமம் பெற்றவா் மற்றும் குத்தகைதாரா்கள் காரணம் என என்ஜிடி கூறியது. எனினும், பட்டாசு ஆலையின் செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்ததாகவும், அவற்றை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளா் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் குறை கூறியது. தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளின் அலட்சியம் அல்லது திறமையின்மை தீ விபத்துக்கு வழிவகுத்ததாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மூலம் ஒரு மாதத்திற்குள் வழங்கவும், மாநில அரசின் தலைமைச் செயலா் இந்த விவகாரத்தில் நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பட்டாசு ஆலை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில், பசுமைத் தீா்ப்பாயம் சுற்றுச்சூழல் சட்ட விஷயத்திற்கு அப்பாற்பட்டு இதர விவகாரங்களிலும் தனது அதிகார வரம்பை செலுத்தும் வகையில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணன் ஆஜரானாா். அப்போது, இது தொடா்புடைய மற்றொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்குடன் இதையும் சோ்த்து விசாரிக்கும் வகையில், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...