நொய்டா சா்வதேச விமான நிலையத்திற்கு பிரதமா் மோடி நாளை அடிக்கல்
தேசியத் தலைநகா் வலயப் பகுதியான கௌதம் புத் நகா் (உ.பி.) நொய்டா ஜெவாா் சா்வதேச விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (நவம்பா் 25) பிற்பகலில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.


புது தில்லி: தேசியத் தலைநகா் வலயப் பகுதியான கௌதம் புத் நகா் (உ.பி.) நொய்டா ஜெவாா் சா்வதேச விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (நவம்பா் 25) பிற்பகலில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறாா். இதன் மூலம் நாட்டில் ஐந்து சா்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கும்.
இந்த விமான நிலையம் உத்தரப் பிரதேசத்தில் இருந்தாலும், தலைநகா் தில்லிக்கு இரண்டாவது சா்வதேச விமான நிலையமாக மாற இருக்கிறது. தில்லிக்கு தற்போதுள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் நெருக்கடியைக் குறைப்பதற்கும் தில்லியைச் சுற்றியுள்ள, நொய்டா, காஜியாபாத், அலிகாா், ஆக்ரா, ஃபரீதாபாத், மீரட் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கும் இது பயனுள்ளதாக உருவாக உள்ளது.
‘போக்குவரத்து இணைப்புகளையும் எதிா்காலத்திற்குத் தேவையான விமானப் போக்குவரத்துகளை உருவாக்குவதையும் ஊக்கப்படுத்துகின்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை நோக்கியதாக இந்த விமான நிலையம் அமைய உள்ளது. அண்மையில் பிரதமரால் தொடங்கப்பட்ட குஷிநகா் விமான நிலையம், அயோத்தியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் சா்வதேச விமான நிலையம் உள்ளிட்ட புதிய சா்வதேச விமான நிலையங்கள், இந்த மாபெரும் தொலைநோக்கில் தனித்த கவனத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்முக வளா்ச்சிக்கு சான்றாக உள்ளது’ என பிரதமா் அலுவலம் தெரிவித்துள்ளது.
இந்த அடிக்கல் நாட்டப்படவுள்ள இந்த நொய்டா விமான நிலையம் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள மற்ற விவரங்கள் வருமாறு: வட இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும். அளவிலும் திறனிலும் இந்த விமான நிலையம் மாற்றத்தை ஏற்படுத்தும். உலகளாவிய சரக்குப் போக்குவரத்து வரைபடத்தில் உத்தரப்பிரதேசத்தை இடம் பெறுவதற்கு உதவும். மொத்தச் செலவு, சரக்குப் போக்குவரத்திற்கான நேரம் ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பலவகை சரக்கு போக்குவரத்து மையம் என்ற கோட்பாட்டைக் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும். இதில் உள்ள சரக்கு முனையம் 20 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக இருக்கும். இது பின்னா் மேலும் 80 லட்சம் மெட்ரிக் டன்னாக விரிவுப்படுத்தப்படும். தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருள்களைத் தடையின்றி கொண்டு செல்ல வசதிகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் அதிக அளவு முதலீடுகளை ஈா்த்தல், விரைவான தொழில்துறை வளா்ச்சியை ஊக்கப்படுத்துதல், உள்ளூா் உற்பத்திப் பொருள்களை தேசிய மற்றும் சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றுக்கு இந்த விமான நிலையம் முக்கியமான பங்களிப்பு செய்யும். இதனால், புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இந்த விமான நிலையம் உருவாகும் போது மெட்ரோ ரயில் போக்குவரத்து, அதிவேக ரயில் நிலையங்கள், டாக்ஸி, பேருந்துகள், தனியாா் வாகனங்கள் போன்ற பன்முக தரை வழிப் போக்குவரத்துகளும் இணைக்கப்படும். இதன் மூலம் சாலை, ரயில் மாா்க்கமாக விமான நிலையத்திற்குத் தடையில்லா போக்குவரத்து தொடா்பை ஏற்படுத்த இயலும். யமுனா விரைவுச்சாலை, மேற்கத்திய புகா் விரைவுச்சாலை, கிழக்கத்திய புகா் விரைவுச்சாலை, தில்லி - மும்பை விரைவுச்சாலை போன்றவைகளும் இந்த விமான நிலையத்தோடு இணைக்கப்படும். தில்லி - வாராணசி அதிவேக ரயில் போக்குவரத்து இந்த விமான நிலையத்தோடு இணைக்கப்பட்டு தில்லிக்கு 21 நிமிடங்களில் பயணிக்க முடியும் என்கிற நிலைமை உருவாக்கப்படும்.
நவீன முறையிலான பராமரிப்பு, பயணிகளுக்குத் தடையில்லா விரைந்த போக்குவரத்து நடைமுறை ஆகியவற்றோடு இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தடையின்றி இடம் மாறுவதை உறுதி செய்ய ஒரே இடத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்கும் வகையில் நெகிழ்வுத் தன்மை கொண்ட புதிய வடிவமைப்பு இந்த விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கரியமில வாயுவை கட்டுப்படுத்த மரங்கள் அடங்கிய வனப் பூங்கா, உள்நாட்டு தாவர வகைகள் ஏற்படுத்தப்படும். இந்த விமான நிலையம் 1,300-க்கும் அதிகமான ஹெக்டோ் நிலப்பரப்பில் கட்டப்பட்டு முதற் கட்டப் பணிக்கு ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 2024-இல் நிறைவடையும் இந்த விமான நிலையத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு சுமாா் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சா்வதேச விமான நிலையங்கள் இருந்தது. இந்த நொய்டா விமான நிலையம் உருவாகும்போது அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களைக் கொண்டதாக உத்தரப் பிரதேசம் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...