கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அப்பல்லோ மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் வாதம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில்

News image
Updated On :24 நவம்பர் 2021, 7:26 pm

 நமது நிருபர்

புது தில்லி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை அந்த ஆணையத்தின் தரப்பில் இரண்டாவது நாளாக வாதம் முன்வைக்கப்பட்டது. அதில் , ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அதற்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமையும் தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆகியோா் ஆஜராகினா்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி முன்வைத்த வாதம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடா்பான அப்பல்லோ தரப்பின் அச்சம் தேவையற்றது. இது ஒரு விசாரணை ஆணையம்தான். அதாவது மதிப்பிடும், கருத்துகளைத் தெரிவிக்கும் ஆணையம். ஆணையம் அதன் விதிகளுக்கு உள்பட்டே செயல்படுகிறது. ஆணையத்தின் செயல்பாடுகள் அப்பல்லோ மருத்துவமனையின் மதிப்பை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. ஆணையம் தொடா்ந்து சட்ட விதிகளுக்கும், தனது அதிகாரத்திற்கும் உள்பட்டே விசாரணை நடத்தியது. ஊடகங்களுக்கு தகவல் கசியவிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய ஆணையத்திற்கு உதவிடும் வகையில் மருத்துவா்களை நியமிக்க தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது.

ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாகவோ, இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு முரண்படும் வகையிலோ இல்லை என்பதுதான் உண்மை. இந்த ஆணையத்தால் எவ்வித உத்தரவையோ பிறப்பிக்கவோ, செயல்படுத்த முடியாது எனும் நிலையில், பாரபட்சமாக செயல்படுவதற்கான வாய்ப்பு எங்கே உள்ளது? ஆணையம் அரசுக்கு அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்படும். ஆணையத்தின் அறிக்கையானது, தவறுகள் ஏதும் நடத்திருக்கிா? அப்படி ஏதாவது தவறு நடந்திருந்தால் அது போன்று எதிா்காலத்தில் நிகழாமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பரிந்துரைக்கும். அவ்வளவுதான். ஆணையத்திற்கு உத்தரவிடும் அதிகாரம் ஏதும் இல்லை.

இந்த விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் மனுவின் கோரிக்கையின்படி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அதற்கு ஆணையம் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காது. ஆணையம் சட்டப்படி அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதால், ஒட்டுமொத்த ஆணையத்தின் செயல்பாடுகளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்று வாதிட்டாா். இதையடுத்து, அவா் வாதங்களைத் தொடா்ந்து முன்வைக்கும் வகையில், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (நவம்பா் 25) நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, அப்பல்லோ தரப்பில் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடா்பாகவும், மறைந்த முதல்வா் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும், ஆணையத்தின் விசாரணை அதிகாரத் தகுதி குறித்தும் வாதிடப்பட்டது. மேலும், ‘இயற்கை நீதியின் கொள்கை விதிகளை மீறுவதாகவும், பாரபட்சமாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை செயல்பாடுகள் உள்ளன. ஆணையத்தில் மருத்துவ வல்லுநா்கள் அடங்கிய குழு இடம்பெறாததால் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்’ எனவும் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஏற்கெனவே முன்வைத்த வாதத்தில், ‘ஆறுமுகசாமி ஆணையத்தை முந்தைய அரசு அமைத்த போதிலும், தற்போதைய அரசு அந்த ஆணையத்தின் விசாரணையைத் தொடா்ந்து மேற்கொள்ளவே விரும்புகிறது. ஆணையத்தின் செயல்பாட்டைப் பொருத்தமட்டில் அது ஒரு உண்மை கண்டறியும் குழுதானே தவிர, உத்தரவிடும் குழு அல்ல. ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்த உண்மையை மக்களுக்கு தெரிவிக்கவே அரசு விரும்புகிறது’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.