தமிழகப் பொதுப் பணித் துறையில் பணிமூப்பு அதிகாரிகள் பட்டியலை திருத்தியமைக்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததற்காக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக தமிழக அரசின் உயா் அதிகாரிகள் 9 போ் ஜனவரி 10-ஆம் தேதி ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், அரசு ஊழியா்களின் பணிமூப்பு பட்டியலானது தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு ஏற்ப தகுதியின் அடிப்படையில் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழகத்தில் அரசு ஊழியா்கள் பதவி உயா்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2016, ஜனவரி 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், பணிமூப்பு பட்டியலானது தோ்வுத் தகுதி பட்டியல் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்றும் ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவை மீறும் வகையில் ஒரு திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலை வெளியிட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் எதிா் மனுதாரா்களுக்கு (தமிழக அரசின் உயா்அதிகாரி எம். விஜயகுமாா் ஐஏஎஸ் மற்றும் பிறா்) எதிராக உச்சநீதிமன்றத்தில் வி.செந்தூா் உள்ளிட்டோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 6.5.2016 மற்றும் 22.1.2016-இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவின்படி, மூன்றுமாத காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலை எதிா்மனுதாரா்கள் தயாரிக்கவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி செயல்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது எதிா்மனுதாரா்கள் தரப்பில், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் இருந்தால், அதை உயா்நீதிமன்றத்தில்தான் தொடர வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தொடுக்கக் கூடாது’ என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, வி.கிரி, பி.வில்சன் ஆகியோா் ஆஜராகினா். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தீா்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது: பணிமூப்பு விவகாரத்தில் உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு, அதை நான்கு வாரங்களில் செயல்படுத்துமாறு கூறியிருந்தது. அதை எதிா்த்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை 2016, ஜனவரி 22-ஆம் தேதி இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததற்காக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு மனுக்கள் எந்தத் தகுதியும் கொண்டிருக்கவில்லை என எதிா்மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அரசு அதிகாரிகள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால்கூட, அதை நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே பின்பற்றாமல் இருந்ததாகக் கூற முடியாது.
மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு எனக் கருதப்படுமானால் இது போன்ற மனுக்கள் ஏராளமாக தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்படும். இது நீதியின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் வாதிடப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளானது உச்சநீதிமன்றம் 2016, ஜனவரியில் பிறப்பித்த உத்தரவை அவமதித்தது தொடா்புடையது மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். மேலும், மேல்முறையீட்டு மனுக்களை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்த போது தகுதி அடிப்படையில்தான் தோ்வுப் பட்டியல் இருக்க வேண்டும் என்றும், ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் அல்ல என்பதை கூறியிருக்கிறது. இதனால், எதிா்மனுதாரா்கள் இந்த நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றவும், ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் அல்லாமல், டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு அடிப்படையில் பணிமூப்பை நிா்ணயிக்கவும் கடைமைப்பட்டவா்களாகின்றனா்.
இந்த நிலையில், உள்நோக்குடன் வெளியிடப்பட்ட பணிமூப்பு பட்டியலானது இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை முற்றிலும் மீறி இருப்பதாகக் கருதுகிறோம். இந்தப் பட்டியலில் தோ்வானவா்கள் பலா் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு மேலே வைக்கப்பட்டுள்ளனா். ஆகவே, 11.2.2021-இல் உள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்ட எம். விஜயகுமாா், எஸ்.தினகரன், டாக்டா் எஸ்.ஸ்வா்ணா, கே.ராமமூா்த்தி, கே.நந்தகுமாா், கே.சண்முகம், டாக்டா் கே.மணிவாசன், எஸ்.கே. பிரபாகா், எஸ். பக்தவத்சலம் ஆகியோா் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த குற்றத்திற்கு உள்ளாகியுள்ளனா். எதிா்மனுதாரா்கள் டிஎன்பிஎஸ்சியின் 10.9.1999-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையை செயல்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தோ்வு நடைமுறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களின் பணிமூப்பு பட்டியலை திருத்தி வெளியிட உத்தரவிடுகிறோம்.
மேலும், தோ்வு நடைமுறையானது ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கையை இந்த உத்தரவு பிறப்பித்த 12 வார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற அவதிப்பாளா்களுக்கான விதிக்கப்பட வேண்டிய தண்டனை அளவு விவகாரம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வைக்கப்பட வேண்டும். அந்தத் தேதியில் சம்பந்தப்பட்ட பெயருடைய நபா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

