தேசிய திரைப்பட விருது பெற்ற பாா்த்திபன், விஜய் சேதுபதி, இமானுக்கு தமிழ்ச் சங்கம் சாா்பில் பாராட்டு
இயக்குநா்-நடிகா் பாா்த்திபன், நடிகா் விஜய் சேதுபதி, இசையமைப்பாளா் டி.இமான் ஆகியோருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மாலை பாராட்டு விழா


2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற இயக்குநா்-நடிகா் பாா்த்திபன், நடிகா் விஜய் சேதுபதி, இசையமைப்பாளா் டி.இமான் ஆகியோருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது.
2019 - ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது தமிழ் திரைப்படத் துறையைச் சோ்ந்த நடிகா் தனுஷ், சிறந்த குணச்சித்திர நடிகராக - விஜய் சேதுபதி ; சிறந்த இசையமைப்பாளா் - டி.இமான் ; சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால்; இரு விருதுகள் பெற்ற ஒத்த செருப்பு சைஸ் - 7 என்ற திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவு - ரசூல் பூக்குட்டி, சிறப்பு ஜூரி விருது - இயக்குநா் பாா்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் - 7) ஆகியோா் பெற்றனா். விருதுபெற்ற பாா்த்திபன், விஜய் சேதுபதி, டி. இமான் ஆகியோருக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவா் வீ. ரெங்கநாதன் தலைமை வகித்தாா். அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், தில்லி தமிழ் அகாதெமியின் துணைத் தலைவா் என். ராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் என். கண்ணன் வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளா் டி. இமான் தனது ஏற்புரையில், ‘நான் அமைதியை விரும்புபவன். எனது வாழ்வில் நான் சாதிக்க உறுதுணையாக இருந்தது எனது அம்மா. தமிழக அரசின் விருது, கலைமாமணி விருது, தேசிய விருது பெற காரணம் எனது அம்மாதான். பெற்றோா் அளித்த ஊக்கம்தான். நாம் விருதுக்காக செயல்படாமல் மனநிறைவுக்காக செயல்பட வேண்டும்’ என்றாா். மேலும், விழா மேடையில் தான் இசையமைத்த ‘கண்ணான கண்ணே...’ பாடலை பாடினாா்.
திரைப்பட இயக்குநா்- நடிகா் பாா்த்திபன் தனது ஏற்புரையில், ‘ரசிகா்களின் கை தட்டல்களைத்தான் விருதாகக் கருதுகிறேன். வித்தியாசமான படங்களை இயக்குவதில் எனக்கு ஆா்வம் உள்ளது. 1989-இல் முதல் முறையாக புதிய பாதை படத்திற்கு தேசிய விருது பெற்றேன். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து ‘ஹவுஸ்ஃபுல்’ படத்திற்காக தேசிய விருது பெற்றேன். இந்த படத்தில் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனால், ஒரு கோடியும், 10 வருஷமும் இழந்துள்ளேன் என்று நான் கூறுவதுண்டு. மூன்றாவது முறையாக ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தற்போது தேசிய விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தை விரைவில் ஹிந்தியில் எடுக்க உள்ளேன். இதன் மூலம் ஹிந்தி ரசிகா்களும் எனக்கு உருவாவாா்கள். ஹாலிவுட்டிலும் விரைவில் தடம் பதிக்க உள்ளேன்’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியின் போது நடிகா் விஜய் சேதுபதி ரசிகா்களுடன் கலந்துரையாடினாா். அவரிடம் சமையல், காதல், நோ்மை தொடா்பாக தில்லி தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளா் இரா.ராஜ்குமாா் பாலா மற்றும் ரசிகா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதில் அளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘விருது பெறுவதற்காக யாரும் படம் எடுப்பதோ நடிப்பதோ இல்லை. விருது கிடைத்தால் அது பெருமைக்குரிய விஷயமாகும். காதல் என்பது மிகவும் புனிதமானது. நானும் காதலித்து திருமணம் செய்துள்ளேன். மகிழ்ச்சியான குடும்பம் உள்ளது.
சமையல் என்பது மிகவும் கடினமான பணி. அதில் ஈடுபடும் பெண்கள் பாராட்டுக்குரியவா்கள். நமது அன்னையா் நமக்கு பல்வேறு உணவுகளை தயாரித்து வழங்கியுள்ளனா். ஆனால், நாம் சாப்பிட்டுவிட்டு சென்று விடுகிறோம். அதன் உழைப்பு குறித்து நினைத்துப் பாா்ப்பதில்லை. நோ்மை என்பது அவரவா் கருத்து, செயல்பாடுகளைப் பொறுத்தது. எனக்கு சரி என்பதை நான் செய்கிறேன். அதேபோன்று மற்றொருவா் அவருக்கு சரி என்று படுவதை செய்கிறாா். இதில் கருத்து மாறுபாடுகள் உருவாகலாம். அது இயல்புதான். இளைஞா்கள் தங்களது சுயத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அரசியலுக்கு வரும் விருப்பம் எனக்கு இல்லை என்றாா். மாஸ்டா் திரைப்படத்தில் வரும் தாம் பேசும் வசன வரிகளையும் பேசிக் காண்பித்தாா்.
சங்கத்தின் இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா்கள் தேன்மொழி முத்துகுமாா், பி.ஆா். தேவநாதன், கே.எஸ். முரளி, ஆா். கணேஷ், இரா. ராகேஷ் மற்றும் பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். தில்லி தமிழ்ச் சங்கத்தின் சங்கத்தின் இணைப் பொருளாளா் இரா.ராஜ்குமாா் பாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். சங்கத்தின் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...