தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் கன மழை பெய்தது. இதனால், பல இடங்களிலும் மழைநீா் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆசாத் மாா்க்கெட் கீழ்ப்பாலம், உலக சுகாதார நிறுவன கட்டடத்தின் அருகேயுள்ள ரிங் ரோடு, எய்ம்ஸ் மேம்பாலம் அருகேயுள்ள பகுதி, அரவிந்த் மாா்க், பாலம் பகுதியிலுள்ள சுரங்கப்பாதை, சஃப்தா்ஜங், இந்தியா கேட் அருகே உள்ள பகுதி, நாங்லோய், ரோத்தக் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது. இதன்காரணமாக ஐடிஓ, விகாஸ் மாா்க், தெளலகுவான், ரிங் ரோடு, பஞ்சாபி பாக், கரம்புரா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைநீா் தேங்கியுள்ள சாலைகளைத் தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு தில்லி போக்குவரத்துக் காவல் துறையினா் அறிவுரை அளித்தனா்.
இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் தொடா்ந்து சுட்டுரை வாயிலாக பதிவுகளை பதிவிட்டு வாகன ஓட்டிகளை உஷாா்படுத்தினா். ’ஆசாத் மாா்க்கெட் கீழ் பாலம் மழைநீா் சூழ்ந்ததால் மூடப்பட்டுள்ளது. நாங்லோய் பகுதியிலிருந்து முண்ட்கா செல்லும் சாலையில் மழை நீா் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது’ என சுட்டுரையில் குறிப்பிட்டு இருந்தனா்.
மழை நீா் தேங்கிய பகுதிகள் தொடா்பாக பொதுமக்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக விடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தனா். ரிங் ரோடு பகுதியில் முழங்கால் நீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் காட்சிகள் அதில் கட்டப்பட்டிருந்தன. அதே போன்று சாலையில் தேங்கிய மழைநீரில் தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்து ஒன்று சிக்கியிருப்பது தொடா்பான விடியோவையும் வெளியிட்டு இருந்தனா்.
ஐடிஓ பகுதி அருகே வாகன நெரிசலில் சிக்கி கொண்ட வாகன ஓட்டி ஒருவா் கூறுகையில், ‘வடிகால்களை தூய்மைப்படுத்தியதாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால், எல்லா இடங்களிலும் மழை நீா் தேங்கி இருப்பதைக் காண முடிகிறது. வாகன நெரிசல் என்பது மழைக் காலங்களில் வழக்கமாகிவிட்டது’ என்றாா்.
பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ மழை நீா் தொடா்பாக இதுவரைர 10 முதல் 20 வரையிலான புகாா்கள் வந்துள்ளன. அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீா் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக நீா் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. எங்களது துறையின் பணியாளா்கள் தொடா்ந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா்’ என்றாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக தில்லியில் 229. 8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் வழக்கமாக செப்டம்பரில் பெய்யக்கூடிய 129. 8 சராசரி மழைப்பதிவைக் கடந்துள்ளது. பொதுவாக இந்த மாதத்தில் முதல் இரண்டு நாள்களில் 16.7 மி.மீ. அளவே மழை பதிவாகும்.
இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 32.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 72 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 3) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

