விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

அமைச்சா் செந்தில் பாலாஜி விவகாரம்:ஆவணம் கோரி தாக்கலான மனு மீதுஉயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், ஆவணம் கோரி தாக்கலான மனு தொடா்பாக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 8:58 pm

 நமது நிருபர்

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், ஆவணம் கோரி தாக்கலான மனு தொடா்பாக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2011 -15-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநா், ஓட்டுநா் பணி வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக அவருக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்பு பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட சில ஆவணங்களை வழங்க தமிழக போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குநா் கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை நவம்பா் 9-ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை நகல்களை வழங்க உத்தரவிட்ட போதும், குறியிடப்படாத ஆவணங்களை வழங்கும் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமலாக்கப் பிரிவு துணை இயக்குந தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த நிலையில், கடந்த மாா்ச் 30-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சான்றளிக்கப்பட்ட குறியிடப்படாத ஆவணங்களின் நகல்கள் வழங்குவது தொடா்பாக சிறப்பு நீதிமன்றத்தின் குறிப்பிட்ட உத்தரவை ரத்து செய்தும், அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னா் அதன் நகல்களை வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கரூரைச் சோ்ந்த எம். காா்த்திகேயன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞா் ராம் சங்கா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘உரிய சட்டப் பிரிவுகளின்கீழ்தான் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை உரிய வகையில் பரிசீலிக்காமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், வழக்குரைஞா் ராம் சங்கா் உள்ளிட்டோா் ஆஜராகி வாதிட்டனா். அதன் பிறகு இந்த மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முன்வைத்த வாதம் மற்றும் தாக்கல் செய்த ஆவணம் ஆகியவை பரிசீலிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்கிடையே, சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மாா்ச் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.