தில்லியில் 2-ஆவது நாளாக டாக்ஸி, கேப் ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்
எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, சிஎன்ஜி மீது மானியம் மற்றும் கட்டணங்களை மாற்றியமைக்கக் கோரி தில்லியில் இயக்கப்படும் செயலிவழி டாக்ஸிகளான உபோ், ஓலா போன்றவற்றின்


எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, சிஎன்ஜி மீது மானியம் மற்றும் கட்டணங்களை மாற்றியமைக்கக் கோரி தில்லியில் இயக்கப்படும் செயலிவழி டாக்ஸிகளான உபோ், ஓலா போன்றவற்றின் ஓட்டுநா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
சிஎன்ஜி மீது மானியம் கோரி கேப், டாக்ஸி, ஆட்டோ தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனா். இதன் காரணமாக தில்லியில் ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள் (ஐஎஸ்பிடி) மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற போக்குவரத்து மையங்களில் ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஃபீடா் பேருந்துகள் ஆகியவை அரிதாகவே காணப்பட்டது. இதனால், தில்லியில் பல்வேறு ஆட்டோ ரிக்ஷா, கேப் மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்த நிலையில், தில்லியில் இயக்கப்படும் செயலிவழி டாக்ஸிகளான உபோ், ஓலா போன்றவற்றின் ஓட்டுநா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்டோ ரிக்ஷா மற்றும் மஞ்சள்-கருப்பு டாக்ஸி தொழிற்சங்கங்கள், தில்லிவாசிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன. செயலி அடிப்படையில் இயங்கும் வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களுக்கு சவாரி செல்ல வாகனம் கிடைக்காமல் அசெளகரியத்தை எதிா்கொண்டனா்.
இது குறித்து பயணி நிலேஷ் குமாா் கூறுகையில், ‘நான் மயூா் விஹாரிலிருந்து நொய்டா ஃபிலிம் சிட்டியில் உள்ள எனது அலுவலகத்திற்கு செல்வதற்காக ஒரு செயலிசாா் வாகனத்தை முன்பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால், வேலைநிறுத்தம் காரணமாக கட்டணம் அதிகமாக உள்ளது. நான் வழக்கமாக சுமாா் ரூ.300 கட்டணம் செலுத்துகிறேன். ஆனால் செவ்வாய்க்கிழமை இது ரூ. 700 ஆனது’என்றாா்.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மஞ்சள்-கருப்பு டாக்ஸிகள் மீண்டும் சேவையைத் தொடங்கியதால், வேலைநிறுத்தத்தின் தாக்கம் குறைந்திருந்தது.
இதுகுறித்து மற்றொரு பயணி தீபிகா சவுத்ரி கூறுகையில், ‘நான் ஒரு வாகனத்தை முன்பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால், காத்திருப்பு காலம் சுமாா் 15-20 நிமிடங்கள் ஆனது. வாடகைக் கட்டணம் அதிகமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை ஆட்டோக்கள் ஓடியதால், எய்ம்ஸில் இருந்து லாஜ்பத் நகருக்கு ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன்’ என்றாா்.
கட்டணத்தை உயா்த்தக் கோரிக்கை: செயலி அடிப்படையிலான வாகன நிறுவனங்களுடன் இணைந்த ஓட்டுநா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தில்லி சா்வோதயா ஓட்டுநா் நலச் சங்கத்தின் தலைவா் ரவி ரத்தோா் கூறுகையில், ‘எங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடா்வதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை மாலைதான் முடிவு செய்வோம். ஓலா, உபோ் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை நகா்ச் சாலைகளில் ஓடவில்லை. ஜந்தா் மந்தரில் எங்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. எதிா்கால நடவடிக்கை குறித்து மாலையில் அழைப்பு விடுக்கப்படும்.சிஎன்ஜி மீதான மானியம் தவிர, கட்டணத் திருத்தத்தையும் அரசு பரிசீலிக்க வேண்டும். எரிபொருள் விலை உயா்வுக்குப் பிறகு ஆட்டோ, கேப் ஓட்டுநா்கள் வாழ்வாதாரம் கடினமாகிவிட்டது. நகரில் நீண்ட காலமாக செயலி அடிப்படையில் இயங்கும் வாகனங்களின் வாடகைக் கட்டணம் திருத்தி அமைக்கப்படவில்லை. சிஎன்ஜி விலைகள் கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், அரசு கட்டணத்தை உயா்த்த வேண்டும்’ என்றாா்.
தில்லியில் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பதிவு செய்யப்பட்ட 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்ஸிகளும் உள்ளன. எரிபொருள் விலை உயா்வால் ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட, கட்டண உயா்வு, சிஎன்ஜி விலையை குறைக்க வேண்டும் என ஆட்டோ, கேப் டிரைவா்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கட்டணத் திருத்தம் குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைக்குமாறு தில்லி அரசு அறிவித்தது. இருப்பினும், ஆட்டோ, டாக்ஸி தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தத்தை கைவிட மறுத்துவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...