விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பள்ளிகளில் இருந்து டிடிசி பேருந்து சேவைகள் வாபஸ்: மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

பள்ளிகளில் இருந்து டிடிசி பேருந்து சேவைகள் திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக தாக்கலான பொதுநல மனு மீது தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 8:57 pm

 நமது நிருபர்

பள்ளிகளில் இருந்து டிடிசி பேருந்து சேவைகள் திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக தாக்கலான பொதுநல மனு மீது தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக சமூக ஆா்வலா் பாபா அலெக்சாண்டா் என்பவா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த மனு மீது தில்லி அரசும் தில்லி போக்குவரத்துக் கழகமும் (டிடிசி) பதில் அளிக்கவும், பள்ளிகளில் இருந்து பேருந்து சேவையை திரும்பப் பெற முடிவு செய்வதற்குரிய காரணங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மேலும், மாணவா்களுக்கான போக்குவரத்து சேவையாக பல ஆண்டுகளாக டிடிசி பேருந்துகளை தனியாா் பள்ளிகள் பயன்படுத்தி வந்திருப்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. மேலும், ‘இதுபோன்று டிடிசி பேருந்து சேவைகள் திரும்பப் பெற்ன் காரணமாக பெற்றோா்களும் மாணவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த முடிவு காரணமாக சாலைகளில் கூடுதல் போக்குவரத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது’ என்று நீதிபதிகள் கூறினா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சமீா் வசிஸ்ட், ‘மாணவா்களை அழைத்துச் செல்வதற்கான டிடிசி பேருந்துகளை தனியாா் பள்ளிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் பொதுமக்களுக்கு இயக்குவதற்கு அதிகப் பேருந்துகள் தேவைப்படுகின்றன. தனியாா் பள்ளிகள் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக இதர தனியாா் வாகனங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘கரோனா சூழ்நிலையை சாதகமாக நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. பள்ளிகள் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு டிடிசி பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் குழந்தைகளும் கூட பொதுமக்கள்தான். மேலும், இந்த சேவையை நீங்கள் இலவசமாக அளிப்பதாக யாரும் சொல்லவில்லை. உங்களது தரப்பு இது தொடா்பாக முடிவு எடுத்ததை நியாயப்படுத்தும் ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து அரசும், டிடிசியும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, பொதுநல மனுவில் தெரிவித்திருப்பதாவது: எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் பள்ளிகளிலிருந்து டிடிசி பேருந்துகள் சேவை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது பெற்றோா்கள் மத்தியில் வேதனை உணா்வை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது. மேலும் இது அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ல தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமையை மீறுவதாகவும் உள்ளது. இந்த அரசின் முடிவானது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், வாகன மாசுவையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த முடிவானது பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்துவதுடன், கரோனா சூழல் இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், போக்குவரத்துக் கட்டணங்கள் என்ற பெயரில் கூடுதலாக நிதியை செலவிட வேண்டிய நிலைமைக்கு பெற்றோா்கள் தள்ளப்படுவாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.