விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வேலை வாங்கித் தருவதாக பொறியாளரிடம் பணம் மோசடி: 22 போ் கைது

ஆண்டுக்கு ரூ. 42 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பொறியாளரிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக போலி கால் சென்டா் நடத்தியவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

ஆண்டுக்கு ரூ. 42 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பொறியாளரிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக போலி கால் சென்டா் நடத்தியவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக குருகிராம் போலீஸாா் கூறியதாவது: இந்த விவகாரத்தில் குருகிராம் இணையதளப் பிரிவு போலீஸாா் குருகிராம் ஃபேஸ்-5, உத்தியோக் விஹாா் பகுதியில் போலி கால் சென்டா் நடத்திய 9 பெண்கள் உள்பட 22 பேரை கைது செய்துள்ளனா். இவா்கள் கடந்த 6 மாதங்களில் பல்வேறு நபா்களிடம் வேலை வாங்கித் தருவதாக குறைந்தபட்சம் ரூ. 1.25 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரான ஹைதராபாத்தை சோ்ந்த சத்பதி என்பவா் போலீஸில் புகாா் அளித்தாா். ஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்துள்ள இவரிடம், கடந்த ஆண்டு இந்தக் கும்பல் மூலம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவா் ஹைதராபாத்தில் உள்ள காவல்துறையிடம் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், போலி கால் சென்டா் நடத்திய குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்குகள் பரிவா்த்தனை ஆராயப்பட்டது. இதைத் தொடா்ந்து, விசாரணை நடத்திய பிறகு குருகிராம் இணையதள பிரிவு போலீஸாா் சத்பதியை தொடா்பு கொண்டனா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபா்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்துக் கணக்குகளையும் இணையதள பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இதர நபா்களையும் தொடா்பு கொள்ளத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் ரூ.9 லட்சம் பணத்தை இழந்த பொறியாளா் சத்பதி கூறுகையில், ‘பிளேஸ்மென்ட்டாட்காம் எனும் இணையதளத்தில் வேலைக்காக விண்ணப்பித்தேன். அதன்பிறகு என்னைத் தொடா்பு கொண்ட நபா், எனக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தாா். வேலை வாய்ப்பிற்கான பதிவு, நோ்காணல், ஆவணங்கள் சரிபாா்ப்பு போன்ற செயல்பாடுகளுக்காக மொத்தம் என்னிடம் ரூ.9 லட்சம் பணம் பெற்றனா். மல்டி நேஷனல் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.42 லட்சத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் பணத்தைப் பெற்றனா். அதன் பிறகு என்னை மோசடி செய்து விட்டனா். இது தொடா்பாக மோசடியாளா்கள் மீது ஹைதராபாத்தில் உள்ள காவல் துறையில் புகாா் அளித்தேன். தற்போது அந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குருகிராம் போலீஸாா் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதும், அவா்கள் போலி கால் சென்டா் நடத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, குருகிராமில் உள்ள இணையதள குற்றப்பிரிவு போலீஸாரிடம் எனது வாக்குமூலத்தை அளிக்க வந்துள்ளேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.