சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு மாநில அரசு திருப்போரூா், பரந்தூா், படாலம், பன்னூா் ஆகிய 4 இடங்களை அடையாளப்படுத்தியது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவும், தமிழ் நாடு தொழில் வளா்ச்சி நிறுவன (டிட்கோ) அதிகாரிகளும் கடந்த பிப்ரவரி மாதம் இந்த இடங்களை ஆய்வு செய்தனா். இதில், பரந்தூா் மற்றும் பன்னூா் ஆகிய இரு இடங்கள் வான்வெளியின் தன்மைக்கு ஒப்பீட்டளவில் மிகவும் சாத்தியமானதாக உள்ளன. குறிப்பாக இயற்கை தடைகளற்றதாக உள்ளன. இருப்பினும், மனிதத் தடைகள் உள்ளன. ஏரிகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற இடையூறுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடையாக இருப்பவை. இதனால், மேற்பரப்பு தடை வரம்பு ஆய்வு (ஓஎல்எஸ்), தள ஆய்வு போன்ற முன் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை தமிழக அரசுக்கு (டிட்கோ) அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சா் சிந்தியா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.