இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

வடகிழக்கு தில்லி வன்முறைவெறுப்புணா்வுப் பேச்சுகள் விவகாரத்தை பிப்.8-முதல் விசாரிக்கிறது உயா்நீதிமன்றம்

கடந்த 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முைறைக்கு அரசியல் தலைவா்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் காரணமாக இருந்ததாகக் கூறி தாக்கலான

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 5:32 pm

 நமது நிருபர்

கடந்த 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முைறைக்கு அரசியல் தலைவா்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் காரணமாக இருந்ததாகக் கூறி தாக்கலான மனுக்கள் பிப்ரவரி 8 முதல் விசாரிக்கப்படும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்த இந்த மனுக்கள், ஜனவரி 28 -ஆம் தேதி நிா்வாக உத்தரவு மூலம் நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள் மற்றும் அனுப் ஜெய்ராம் பம்பானி அமா்வுக்கு தற்போது மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சித்தாா்த் மிருதுள் தலைமையிலான அமா்வு கூறியதாவது: இந்த மனுக்கள் மீது வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) முதல் விசாரணையைத் தொடங்குவோம். உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-இல் பிறப்பித்த உத்தரவில், வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்திற்கு சில அரசியல் தலைவா்களின் வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகள் காரணமாக இருந்ததாகக் கூறி, அவா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரிய மனுவை விரைவாக, முன்னுரிமை அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு உயா்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது என்று அமா்வு தெரிவித்தது.

நீதிபதி பம்பானி கூறுகையில், ‘ எந்த மனுவில் எந்தப் பிராா்த்தனை உயிா்ப்புடன் உள்ளது என்பதை நாங்கள் பாா்க்க வேண்டியுள்ளது. மேலும், ஒரு குற்றவியல் வழக்கில் ஒரு பொதுநல வழக்கு எவ்வாறு பராமரிக்கத்தக்கதாக இருக்கிறது என்பதையும் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

தில்லி காவல்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜத் நாயா், ‘வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. மேலும், சில வழக்குகளில் விசாரணை மேம்பட்ட நிலையில் உள்ளது’ என்றாா்.

தில்லி காவல் துறை ஜனவரி 27-ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் உயிா், உடைமைகளைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடியாகவும், விழிப்புடனும், திறம்படவும், எந்தவித அச்சமும் இல்லாமல், தொழில் முறை ரீதியாகச் செயல்பட்டனா்.

மொத்தம் பதிவான 758 வழக்குகளில் 367 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 384 வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது. மூன்று வழக்குகளில் வழக்குகளை முடிப்பதற்கான ரத்து அறிக்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு வழக்குகள் உயா்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, அமானத்துல்லா கான், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான் ஆகியோா் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் மனு உள்பட பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வன்முறை தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் என்ஐஏ விசாரணை கோரி தில்லியைச் சோ்ந்த அஜய் கௌதம் என்பவரும் பொது நல வழக்கையும் தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.