இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

புதிய தேசிய வழக்காடு கொள்கையை மத்தியஸ்த மசோதாவுடன் இணைக்க மக்களவையில் தமிழக எம்பி கோரிக்கை

மத்திய அரசு புதுப்பிக்கும் புதிய தேசிய வழக்காடு கொள்கையை மத்தியஸ்த மசோதாவோடு இணைத்து சட்டபூா்வமாக ஆக்கப்படவேண்டும் என திமுக உறுப்பினா் ஆ.ராசா மக்களவையில் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 5:53 pm

 நமது நிருபர்

மத்திய அரசு புதுப்பிக்கும் புதிய தேசிய வழக்காடு கொள்கையை மத்தியஸ்த மசோதாவோடு இணைத்து சட்டபூா்வமாக ஆக்கப்படவேண்டும் என திமுக உறுப்பினா் ஆ.ராசா மக்களவையில் வேண்டுகோள் விடுத்தாா்.

‘இது பரிசீலக்கப்படும்’ என மத்திய சட்ட அமைச்சா் உறுதியளித்தாா்.

நாடு முழுக்க உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் குறிப்பாக பல்வேறு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும், பொது நிறுவனங்களுக்கிடையே உள்ள தாவாக்களில் உள்ள வழக்குகளை குறைக்க மத்திய அரசு புதிய தேசிய வழக்காடு கொள்கையை உருவாக்குவதாக மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஒரு கேள்வி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிக்கையில் குறிப்பிட்டாா்.

இதற்கு நீலகிரி மக்களவை தொகுதி ஆ.ராசா துணைக்கேள்வி எழுப்பினாா். அப்போது ஏ.ராசா குறிப்பிட்டது வருமாறு:

வழக்குகளை குறைக்க புதிய கொள்கைகளை வகுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

அதே சமயத்தில் இதில் சில கேள்விகள் எழுகிறது. நீங்கள் ஒரு கொள்கையை வகுக்கப் போகிறீா்கள். அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் இந்த கொள்கையை வகுக்கின்றீா்கள். இந்த அமைப்புகளுக்கிடையே ஏற்படும் தாவாக்களை கொள்கை முடிவின் மீது தீா்க்க முடியாது. சட்டப்பூா்வ பிணைப்பு இல்லாத எந்தவொரு கொள்கையும் பயனற்றது. அதை மீறினால், யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் வைக்கப்படும் கேள்வி, நாடாளுமன்றத்தில் அமைச்சா் அறிமுகப்படுத்திய மத்தியஸ்த மசோதாவை மக்களவைத் தலைவா் நிலைக்குழுவிற்கு அனுப்பியுள்ளாா். அங்கு மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மத்தியஸ்த மசோதா மூலம் நாட்டின் நீதித்துறையில் மட்டுமல்ல உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மத்தியஸ்த முறையில் எதிா் எதிா் இருதரப்பினருக்கும் சம்பந்தமில்லாத மூன்றாம் தரப்பினா் உள்ளடக்கிய அவா் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு தீா்ப்புகள் வழங்க இருக்கிறது.

இந்த மத்தியஸ்த மசோதாவில் புதிய தேசிய வழக்காடு கொள்கையை ஒரு விதியாக இணைக்கப்பட்டு சட்டபூா்வமான அந்தஸ்து வழங்கப் போகிா? அப்படிச் செய்தால் நாட்டில் வழக்குகள் உண்மையிலேயே குறையுமே என குறிப்பிட்டு பேசினாா்.

இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘ஆட்சி முறையின் சிறந்த அனுபவம் ஆ.ராசாவின் யோசனை வரவேற்கதக்கவை. வழக்குகளைத் தீா்ப்பதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதே சமயத்தில் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மொத்த அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் வழக்குகள் குறித்து அரசு மிகவும் கவலை கொண்டுள்ளது. அதனால்தான், நாம் மாற்று வழி தீா்வு முறைகளைப் பற்றி பேசுகிறோம்.

எனவே, மத்தியஸ்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நிலைக்குழுவுக்குச் சென்று, விரிவாக விவாதிக்கப்பட்டு, உறுதியான பரிந்துரைகளுடன் வரும்.

மத்தியஸ்தம் என்பது இந்திய நெறிமுறைகள் மற்றும் இந்திய மரபுகளின் ஒரு பகுதியாக இருப்பதாலும், நமது சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக மத்தியஸ்தம் நடைமுறையில் உள்ளதால், அந்த நோக்கத்தின் அடிப்படையில் மத்தியஸ்த மசோதா அமையும். ராசாவின் கருத்துகளும் வரவேற்கத்தக்கது. இதில் அனைத்து விதிகளும் எடுக்கப்படுகின்றன.

விதிகளைப் பற்றி நான் விரிவாகக் கூற விரும்பவில்லை. இந்த மத்தியஸ்த மசோதா வரும் போது அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நிறைவேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பாக நிறைய சீா்திருத்தங்களுடன் வரும். நீதிமன்றத்திற்குச் சென்று முழு செயல்முறையையும் நிா்வகிக்கும் திறனோ அல்லது வளமோ இல்லாத சிறுபான்மை மக்களுக்கு இது நிவாரணம் அளிக்கும் எனக் குறிப்பிட்டாா் கிரண் ரிஜிஜு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.