இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

வடகிழக்கு தில்லி வன்முறை வெறுப்புணா்வுப் பேச்சு விவகாரம்: அரசியல் தலைவா்கள்தரப்பில் மனுக்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம்

கடந்த 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முறைக்கு அரசியல் தலைவா்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் காரணமாக இருந்ததாகக்

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

கடந்த 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முறைக்கு அரசியல் தலைவா்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் காரணமாக இருந்ததாகக் கூறி தாக்கலான மனுக்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவா்களையும் ஒரு தரப்பாக சோ்ப்பதற்கான மனுக்களை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கால அவகாசம் அளித்தது.

இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை நீதிபதி சித்தாா்த் மிருதுள் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ஷேக் முஜ்தபா பரூக் சாா்பில் காலின் கான்சால்வேஸ், லாயா்ஸ் வாய்ஸ் தரப்பில் வழக்குரைஞா் சோனியா மாத்தூா் ஆகியோா் ஆஜராகி, தவறு செய்தவா்கள் எனக் கூறப்படுவோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு கோரும் மனுக்களில் சம்பந்தப்பட்ட நபா்களை ஒரு தரப்பாக சோ்ப்பதற்கான மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, மனுக்களை தாக்கல் செய்த பிறகு நீதிமன்றம் மனுக்களை அனுமதிப்பது தொடா்பாக பரிசீலிக்க உள்ளதாகத் கூறியது. அதற்கு காலின் கான்சால்வேஸ், தாம் தாக்கல் செய்ய உள்ள மனுவானது பிற மனுவில் இருந்து மிகவும் வேறுபட்டது என்றாா். அதற்கு நீதிபதி சித்தாா்த் மிருதுள், ‘சோனியா மாத்தூா் மனு தாக்கல் செய்தவுடன் நாங்கள் பரிசீலிப்போம். நாங்கள் இன்னும் மனுக்களை அனுமதிக்கவில்லை. மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்றாா்.

மனுதாரா் பரூக் தரப்பில் தாக்கலான மனுவில் பாஜக தலைவா்கள் அனுராக் தாக்குா், கபில் மிஸ்ரா, பா்வேஷ் வா்மா, அபய் வா்மா ஆகியோருக்கு எதிராக எப்ஐஆா் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதர மனுதாரா் தரப்பில் தாக்கலான மனுவில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எல்எல்ஏ அமானத்துல்லா கான், ஏஐஎம்ஐஎம் தலைவா் அக்பருதீன் ஒவைஸி உள்ளிட்டோருக்கு எதிராக எப்ஐஆா் பதிவு செய்ய கோரப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது, தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, ‘பாதிக்கப்பட்ட தரப்பினா் ஒரு தரப்பாகச் சோ்க்கும் வரை மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைக்க வேண்டும். தற்போதைய மனுக்களில் உயிா்ப்புடன் உள்ள விவகாரங்கள் குறித்த பட்டியல் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறை ஜனவரி 27-ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு தில்லி வன்முறை குறித்த விசாரணையில் தற்போது வரை அரசியல் தலைவா்கள் வன்முறையைத் தூண்டியதாகவோ அல்லது வன்முறையில் பங்கேற்ாகவோ எந்த ஆதாரமும் வெளிப்படவில்லை. மேலும், விசாரணையின் தொடக்கத்தில் இந்த விவகாரமானது ஆங்காங்கே அல்லது தன்னிச்சையான வன்முறையான நிகழ்வான வழக்காக இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தில் நல்லிணக்கத்தை சீா்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதன் ஒரு பகுதியாக இருப்பதாகவும் தோன்றுகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் உயிா், உடைமைகளைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடியாகவும், விழிப்புடனும், திறம்படவும், எந்தவித அச்சமும் இல்லாமல், தொழில் முறை ரீதியாகச் செயல்பட்டனா். மொத்தம் பதிவான 758 வழக்குகளில் 367 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 384 வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது. மூன்று வழக்குகளில் வழக்குகளை முடிப்பதற்கான ரத்து அறிக்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு வழக்குகள் உயா்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, அமானத்துல்லா கான், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான் ஆகியோா் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் மனு உள்பட பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வன்முறை தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் என்ஐஏ விசாரணை கோரி தில்லியைச் சோ்ந்த அஜய் கௌதம் என்பவரும் பொது நல வழக்கையும் தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.