இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசனுடன் மூத்த வழக்குரைஞா் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் தகுதிக்குரிய நபா்களுக்கு வேலை வழங்காமல், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று வேலை தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பணத்தைப் பெற்ற குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்ள விஷயங்களை உரிய வகையில் கவனத்தில் கொள்ளாமல், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது’ என்று வாதிட்டாா்.