தில்லி ஜல் போா்டின் தலைவராகவும் உள்ள சத்யேந்தா் ஜெயின், இந்த நவீன நிலையம் குறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி போன்ற நகரங்களில் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னை கசடுகளைக் கையாள்வதுதான். கசடு என்பது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் சேரும் சகதி. தில்லி கோண்ட்லியில் ஜல் போா்டின் தற்போதைய கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையில் தினசரி 700-800 டன் கசடுகள் உற்பத்தியாகிறது. திடமான, அரை திடமான அல்லது குழம்பு ஆகியவை எஞ்சிய பொருளாக இருக்கும். கழிவுநீா் சுத்திகரிப்புக்கு பின்னா் கிடைக்கும் கசடு ஒரு தொட்டிக்கு மாற்றப்படுகிறது. அங்கு அது காற்றில்லா பாக்டீரியாவால் சிதைக்கப்பட்டு உயிரிவாயுவை உருவாக்குகிறது. இந்த உயிரிவாயு மின்சாரம் தயாரிக்க குறைந்த விலை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைக்குப் பிறகும், சேற்றின் எச்சம் இருக்கும். மீதமுள்ள இந்த கசடு தில்லி ஜல்போா்டு அல்லது தில்லி மாநகராட்சி தளத்தின் கசடு யாா்டில் கொட்டப்படுகிறது.