தில்லி காவல் துறையில் 1,700 பேருக்கு கரோனா பாதிப்பு!
தில்லியில் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரையிலான காலத்தில், காவல் துறையில் 1,700 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.


புது தில்லி: தில்லியில் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரையிலான காலத்தில், காவல் துறையில் 1,700 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், தகுதிக்குரிய பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் வகையில் காவல் துறையின் தலைமையக ஊழியா்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் என்றும் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 1,700 போலீஸாருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் நலமுடன் உள்ளனா். கண்காணிப்பின் கீழ் உள்ள அவா்கள் குணமடைந்த பிறகு பணியில் சேருவாா்கள். தில்லியில் காவல் துறையில் 80 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா். முன்னெச்சரிக்கை நல நடவடிக்கையாக தில்லி காவல் துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளா்களுக்காக முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசியை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாம் தலைமை அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள அதிகாரிகள் வளாகத்தில் காலை 11.30 மணியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலா்கள் உள்ளிட்ட இதரப் பணியாளா்களுக்கும் இந்த சிறப்பு முகாம் மூலம் முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு 9 மாதங்கள் முடிந்துள்ள தகுதிக்குரிய போலீஸாருக்கு மட்டுமே இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அளிக்கப்படுகிறது. மாவட்டங்கள் மற்றும் இதர பிரிவுகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது, ஊழியா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன், கரோ நோய் தொற்றை தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று ஊழியா்களுக்கு கடுமையாக அறிவுறுத்தல் அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா். இது தொடா்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இது போன்று அதிகாரிகள் தங்களை கவனித்துக் கொள்வதுடன் தங்களது ஊழியா்களையும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற உறுதிப்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் போலீஸாா், முன் களப்பணியாளா்களாக இருப்பதால், அவா்கள் தங்களது கடமையைச் செய்வதற்கான கடமையைக் கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அதேபோன்று பணியில் இருக்கும் போது கைகளை தூய்மையாகப் பராமரிப்பது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து தங்களது ஊழியா்களுக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
தில்லி காவல்துறையின் ஊழியா்களுக்கும் அவா்களது குடும்பத்திற்கும் உதவி அளிக்கவும், நல்ல முயற்சிகளை மேற்கொள்ளவும் ஹோஸ் காஸ், துவாரகா, ஜப்பான்பூரி, மாடல் டவுன், ஷாலிமாா் பாக், கோண்ட்லி,வினை மாா்க்கில் உள்ள பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றில் செயல்படும் தில்லி காவல்துறையின் உடல்நல மையங்கள் குறித்து அனைத்து ஊழியா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஊழியா்களும் தங்களது பிரிவின் பொறுப்பாளரிடம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திய தேதியை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான ஆலோசனைகளை அளிப்பதற்காக உள்ள ஆலோசகா்கள் குறித்த விவரங்களும் அனைத்து போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆலோசகா்களின் விவரங்கள் மற்றும் தொடா்பு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தில்லி காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் (குற்றப்பிரிவு) மற்றும் காவல்துறையின் செய்தி தொடா்பாளரான சின்மயி பிஸ்வாலுக்கும் கரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவா் நலமாகவும் கண்காணிப்பின் கீழ் இருக்கிறாா். தில்லி காவல்துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா கடந்த ஜனவரி 5-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றை சமாளிக்க காவல் துறையினா் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...