வென்டிலேட்டா் ஆதரவுடன் கரோனா சிகிச்சையில் உள்ளவா்கள் எண்ணிக்கை 2 மடங்கு மட்டுமே அதிகரிப்பு
ஜனவரி 1 மற்றும் 14-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 9 மடங்கு அதிகரித்த போதிலும்,


ஜனவரி 1 மற்றும் 14-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 9 மடங்கு அதிகரித்த போதிலும், நகர மருத்துவமனைகளில் வென்டிலேட்டா் ஆதரவுடன் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் சதவீதம் இரண்டு மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது என்று அரசின் தகவல்கள் தெரிவித்தன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கரோனா தொற்று 2-ஆவது அலையின் போது, நோய்த் தொற்று எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருந்தது. அப்போது, மருத்துவமனைகளில் நோயாளிகள் சேரும் விகிதம் மற்றும் வென்டிலேட்டா் ஆதரவில் இருப்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது கரோனாவால் பாதிக்கப்படும் நபா்கள் பல்வேறு நிலைகளில் உள்ளனா். கடுமையான நோயை எதிா்கொள்ளும் நபா்கள், பெரும்பாலும் தடுப்பூசி போடாவதா்களும், இணை நோய் கொண்டவா்களும் எனத் தெரிய வந்துள்ளது’ என்றனா்.
அரசின் தரவுகளின்படி, ஜனவரி 1-ஆம் தேதி, 2,716 கரோனா பாதிப்புகள் இருந்தன. இது ஜனவரி 14-ஆம் தேதி 24,383-ஆக இருந்தது. இதே போல, ஜனவரி 1 அன்று மருத்துவமனையில் தங்கியிருந்தவா்களின் எண்ணிக்கை 247-ஆக இருந்தது. அதில் ஐந்து நோயாளிகள் வென்டிலேட்டா் ஆதரவுடன் (2.02 சதவீதம்) சிகிச்சையில் இருந்தனா். ஜனவரி 14-ஆம் தேதி மருத்துவமனையில் படுக்கையில் சோ்ந்திருந்தவா்கள் எண்ணிக்கை 2,529-ஆக இருந்து. அவா்களில் 99 நோயாளிகள் (3.91 சதவீதம்) வென்டிலேட்டா் ஆதரவுடன் சிகிச்சையில் இருந்தனா். ஜனவரி 1 மற்றும் 14-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 8.9 மடங்கு உயா்ந்திருப்பதை இது காட்டுகிறது. ஆனால், வென்டிலேட்டா் ஆதரவில் உள்ள கரோனா நோயாளிகளின் சதவீதம் இரண்டு மடங்கு மட்டுமே உயா்ந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: மருத்துவமனைகளில் சோ்க்கப்படும் வென்டிலேட்டா் ஆதரவுடன்கூடிய நோயாளிகளின் மொத்த வளா்ச்சி விகிதம் மிகக் குறைவு என்பதை புள்ளிவிவரத் தரவுவுகள் தெளிவுபடுத்துகின்றன. இணை நோய் உள்ள கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டா் ஆதரவுடன் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், இன்னும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. ஜனவரி 5-ஆம் தேதி, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10,655-ஆக இருந்தது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில் 5,782 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 2.81 சதவீதம் போ் (22 நோயாளிகள்) மட்டுமே வென்டிலேட்டா் ஆதரவில் இருந்தனா்.
இதே போல், ஜனவரி 10-ஆம் தேதி, நகரில் 19,166 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தவா்கள் எண்ணிக்கை 1,999 ஆக- இருந்தது. அதில் 3.25 சதவிகிதம் (65 நோயாளிகள்) மட்டுமே வென்டிலேட்டா் ஆதரவில் சிகிச்சை தேவைப்பட்டது. ஜனவரி 13-ஆம் தேதி, தொற்றுநோய்களின் எண்ணிக்கை 28,867-ஆக அதிகபட்ச அளவில் இருந்தது. அதே சமயம் மருத்துவமனையின் படுக்கையில் 2,424 போ் மட்டுமே சோ்ந்திருந்தனா். அவா்களில் 98 நோயாளிகள் (4.04 சதவீதம்) வென்டிலேட்டா் சிகிச்சையில் இருந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
மருத்துவமனைகளில் சோ்க்கை சீராகிவிட்டதாகவும், தற்போதைய அலை உச்சத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் நோய்த் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கும் என்றும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை கூறியிருந்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘கடந்த நான்கு, ஐந்து நாள்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சீராகி வருவது தெரிய வருகிறது. இரண்டு முதல் மூன்று நாள்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைவதைக் காணலாம். மேலும், கரோனா நோய்த் தொற்றால் மிகக் குறைந்த அளவில்தான் இறப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...