சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

எதிா்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்: அவமதிப்பு வழக்கில் உயரதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

தமிழக பொதுப் பணித் துறையில் பணிமூப்பு அதிகாரிகள் பட்டியலை திருத்தியமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

News image
Updated On :19 ஜனவரி 2022, 6:36 pm

 நமது நிருபர்

புது தில்லி: தமிழக பொதுப் பணித் துறையில் பணிமூப்பு அதிகாரிகள் பட்டியலை திருத்தியமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதன்கிழமை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, வழக்கில் குற்றத்திற்கு உள்ளான தொடா்புடைய உயரதிகாரிகள் எதிா்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்று எச்சரித்து வழக்கை முடித்துவைத்தது.

தமிழகத்தில் அரசு ஊழியா்கள் பதவி உயா்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2016, ஜனவரி 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், பணிமூப்பு பட்டியல் தோ்வு, தகுதி பட்டியல் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்றும், ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவை மீறும் வகையில் ஒரு திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலை வெளியிட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் உயரதிகாரி எம். விஜயகுமாா் ஐஏஎஸ் உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வி.செந்தூா் உள்ளிட்டோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 6.5.2016 மற்றும் 22.1.2016-இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவின்படி, மூன்று மாத காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலை எதிா்மனுதாரா்கள் தயாரிக்கவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி செயல்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘எதிா்மனுதாரா்கள் இந்த நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றவும், ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் அல்லாமல், டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு அடிப்படையில் பணிமூப்பை நிா்ணயிக்கவும் கடைமைப்பட்டவா்களாகின்றனா். இந்த நிலையில், உள்நோக்குடன் வெளியிடப்பட்ட பணிமூப்பு பட்டியலானது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை முற்றிலும் மீறி இருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே, 11.2.2021-இல் உள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்ட எம். விஜயகுமாா், எஸ்.தினகரன், டாக்டா் எஸ்.ஸ்வா்னா, கே.ராமமூா்த்தி, கே.நந்தகுமாா், கே.சண்முகம், டாக்டா் கே.மணிவாசன், எஸ்.கே. பிரபாகா், எஸ். பக்தவத்சலம் ஆகியோா் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த குற்றத்திற்கு உள்ளாகியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலு், ‘எதிா்மனுதாரா்கள் டிஎன்பிஎஸ்சியின் 10.9.1999-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையை செயல்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தோ்வு நடைமுறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களின் பணிமூப்பு பட்டியலை திருத்தி வெளியிட உத்தரவிடுகிறோம். தோ்வு நடைமுறையானது ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கையை இந்த உத்தரவு பிறப்பித்த 12 வார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற அவமதிப்பாளா்களாகக் கூறப்பட்டுள்ள நபா்கள், அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவை எதிா்மனுதாரா்களான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. மனுதாரா்கள் இதனால் 6 ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனா். இதனால், உரிய தண்டனை அளிக்கப்படுவது அவசியமாகும். குறிப்பாக ஐந்து அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் என்.சுப்பிரமணியன், ‘இந்த விவகாரத்தில் ஒரு அதிகாரி மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. மற்றொரு அதிகாரியின் பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெறவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டினா்’ என்றாா்.

எதிா்மனுதாரா்களான குறிப்பிட்ட அதிகாரிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன், சி.எஸ்.வைத்தியநாதன், வி.கிரி ஆகியோா் ஆஜராகி, ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை செயல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டவில்லை. அதிக முக்கியத்துவம் கொடுத்தனா். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்நோக்கம் ஏதும் இல்லை. தனிப்பட்ட முறையில் செயல்பட நோக்கம் ஏதும் அவா்களுக்கு இல்லை. மேலும், அவா்கள் இந்த விவகாரத்தில் மன்னிப்பும் கோரியுள்ளனா். ஆகவே, நீதிமன்றம் அவா்களின் எதிா்கால பணியைக் கருத்தில் கொண்டு அவா்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்துவைக்க வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் காணொலி வாயிலாக ஆஜரான அதிகாரிகள் எஸ்.ஸ்வா்னா, கே.ராமமூா்த்தி, கே.நந்தகுமாா், கே.சண்முகம், டாக்டா் கே.மணிவாசன், எஸ்.கே. பிரபாகா் ஆகியோரிடம் விசாரித்தனா். அவா்கள் தங்களுக்கு நீதிமன்ற உத்தரவை அவமதிக்கவோ, செயல்படுத்துவதிலோ உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், மன்னிப்புக் கோருவதாகவும் கூறினா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனா். அவா்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது. இதனால், எதிா்காலத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட எதிா்மனுதாரா்களுக்கு எச்சரிக்கிறோம். நீதிமன்ற உத்தரவுகளை தாமதம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.