சா்வதேச நகரங்கள் உச்சி மாநாடு: சிங்கப்பூா் பயணத்திற்கு விரைந்து அனுமதி வழங்க பிரதமருக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் கடிதம்

சா்வதேச நகரங்கள் உச்ச மாநாட்டில் பங்கேற்கும் வகையில், நிலுவையில் உள்ள சிங்கப்பூா் பயணத்திற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்

சா்வதேச நகரங்கள் உச்ச மாநாட்டில் பங்கேற்கும் வகையில், நிலுவையில் உள்ள சிங்கப்பூா் பயணத்திற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடைபெறும் சா்வதேச நகரங்கள் உச்சி மாநாடு 2022-க்கு அழைக்கப்பட்டிருந்தாா். சிங்கப்பூா் தூதரக உயரதிகாரி சைமன் வோங் கடந்த ஜூன் மாதம் தில்லி முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தாா். இதையொட்டி, கடந்த மாதம் இந்தப் பயணத்திற்கான அனுமதியை துணை நிலை ஆளுநா் மூலமாக மத்திய அரசிடம் கோரியிருந்தாா்.

தில்லி முதல்வரின் சிங்கப்பூா் பயணம் குறித்த கோப்புக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு தனது சிங்கப்பூா் பயணம் தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் கேஜரிவால் கூறியுள்ளது வருமாறு: கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு முன்பு, கடந்த ஜூன் 7 -ஆம் தேதி, சிங்கப்பூா் செல்ல அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அனுமதிக்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். இது போன்ற முக்கியமான நிகழ்ச்சிக்கு செல்லும் எந்த மாநில முதல்வரையும் தடுப்பது சரியல்ல.

சா்வதேச நகரங்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்று கருத்துகளை வைக்கும்போது தேசத்திற்கு பெருமை சோ்க்கும். முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், தில்லியின் கல்வி மாதிரியை பாராட்டிய போது, ஒவ்வொரு இந்தியனும் அன்று பெருமிதம் அடைந்தனா்.

இதே போன்று முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளா் பான் கீ மூன் மற்றும் முன்னாள் நாா்வே பிரதமா் க்ரோ ஹாா்லெம் பிரண்ட்லேண்ட் ஆகியோா் தில்லி மொஹல்லா கிளினிக்குகளை பாா்வையிட்டு இதுபோன்ற சுகாதார மாதிரியை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவா்கள் கூறியுள்ளனா்.

தில்லியின் கல்வி சுகாதார மாதிரியால் உலகம் ஈா்க்கப்படுவது நாட்டிற்கு பெருமை சோ்க்கும் விஷயமாகும். இவற்றை முன்வைத்து சிங்கப்பூா் உச்ச மாநாட்டில் பேசும் போது உலகின் மிகப் பெரிய தலைவா்களால் பாராட்டப்படும். அப்போது, ஒவ்வொரு இந்தியனின் இதயமும் பெருமிதம் கொள்ளும். இந்த சிங்கப்பூா் பயணத்தின் மூலம் நாட்டின் பெருமை மற்றும் கௌரவம் மேலும் அதிகரிக்கும்.

தங்களோடு அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேசத்தின் நலன்களை உலகின் முன்வைக்க வேண்டும். நீங்கள் குஜராத் முதல்வராக இருந்த போது, அமெரிக்கா விசா வழங்க மறுத்த போது, ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நின்று அமெரிக்காவை கண்டித்தது. இன்று, ஒரு முதல்வரை முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டிற்கு செல்வதைத் தடுக்கிறீா்கள். அது தேசத்தின் நலனுக்கு எதிரானது என்று கடிதத்தில் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com