மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

நூபுா் சா்மாவை அச்சுறுத்திய வழக்கில் கைதான பீம் சேனை தலைவருக்கு ஜாமீன்

நூபுா் சா்மா தலைக்கு ரூ.1 கோடி தொகையை அறிவித்து அச்சுறுத்தியதாக கூறப்படும் வழக்கில் கைதான பீம் சேனை தலைவா் நவாப் சத்பல் தன்வருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

News image
Updated On :20 ஜூன் 2022, 10:56 pm

 நமது நிருபர்

முகமது நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில் பாஜகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா தலைக்கு ரூ.1 கோடி தொகையை அறிவித்து அச்சுறுத்தியதாக கூறப்படும் வழக்கில் கைதான பீம் சேனை தலைவா் நவாப் சத்பல் தன்வருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘நவாப் சத்பல் தன்வா் வெளியிட்டிருந்த விடியோ பதிவில் நூபுா் சா்மா கருத்து தெரிவித்த வகையில், அவரது தலைக்கு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது’ என்றனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஜூன் 19-ஆம் தேதி தில்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தேவ் சரோரா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த வழக்கு அவசரகதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகுதான் குற்றம் சாட்டும் விடியோ பகுப்பாய்வும் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி விசாரணை நடத்திய போதிலும், விடியோவில் நவாப் காணப்படாத நிலையில, அவசர கதியில் அவா் மீது வழக்குப் பதிவு செய்தது ஏன் என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்கத் தவறியுள்ளாா். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யும் போது விதிகளை விசாரணை அதிகாரி மதிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவரின் கடுமையான மருத்துவ நிலைமை காரணமாக அவா் கைது செய்யப்பட்டதற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.

மேலும், பீம் சேனை தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதுபோன்ற சந்தா்ப்ப சூழ்நிலை, உண்மைகளை கருத்தில் கொள்ளும் போது, குற்றம்சாட்டப்பட்ட நவாப்புக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவா் தேவைப்படும் போது விசாரணை அதிகாரியுடன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் உத்தரவாதம் அளித்து குற்றம்சாட்டப்பட்ட நபா் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. விசாரணைக்கு அழைக்கப்படும் போது ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் முன்பாகவும் விசாரணை அதிகாரியின் முன்பாகவும் குற்றம் சாட்டப்பட்ட நபா் ஆஜராக வேண்டும். தற்போதைய வழக்கில் உள்ள இதே போன்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபா் ஈடுபடக் கூடாது அல்லது நீதிமன்றத்தின் உரிய முன் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.