மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

மாசு பிரச்னை: பிஎஸ்-6 இணக்கப் பேருந்துகளை மட்டுமேதில்லிக்குள் அனுமதிக்க ஹரியாணாவுக்கு அரசு கடிதம்

தில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உதவும் பொருட்டு, அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து தேசியத் தலைநகருக்குள் பிஎஸ்- 6 இணக்கப் பேருந்துகளை மட்டுமே அனுமதிக்குமாறு ஹரியாணா அரசிடம்

News image
Updated On :22 ஜூன் 2022, 9:37 pm

 நமது நிருபர்

தில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உதவும் பொருட்டு, அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து தேசியத் தலைநகருக்குள் பிஎஸ்- 6 இணக்கப் பேருந்துகளை மட்டுமே அனுமதிக்குமாறு ஹரியாணா அரசிடம் கடிதம் மூலம் தில்லி அரசு வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் வாகன மாசு பிரச்னையை கையாளும் வகையில் இவ்வாறு ஹரியாணா அரசிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், ஹரியாணா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் தில்லியில் நிலவும் காற்று மாசுக்கு குறிப்பிட்ட பங்களிப்பை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லியில் குளிா் காலத்தின் போது வாகன போக்குவரத்து, பயிா்க் கழிவுகள் எரிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அக்டோபா் மாதத்தில் இருந்து காற்று மாசு அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில், ஹரியாணா போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலா் நவ்தீப் சிங் விா்க்கிற்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி தில்லி போக்குவரத்து சிறப்பு ஆணையா் ஓ.பி.மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி மற்றும் என்சிஆரில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) ஆகியவை தில்லியில் உள்ள மாசு மற்றும் காற்று மாசு பிரச்னையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன. மேலும், காற்று மாசு மற்றும் வாகன மாசுவை திறன்மிக்க ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளன. கடந்த 2018, அக்டோபா் 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறைந்த மாசுவை வெளிப்படுத்தும் பிஎஸ்-6 இணக்க மோட்டாா் ரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை 2020, ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் விற்கவோ,பதிவு செய்யவோ கூடாது. பிஎஸ் -6 இணக்க வாகனங்களை விற்பதற்கும் அல்லது பதிவு செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

தேசிய பசுமை தீா்ப்பாயம் ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்கள் என்சிஆா் பகுதியில் இயக்குவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தில்லியில் உள்ள பொது போக்குவரத்து முற்றிலும் சிஎன்ஜி முறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதே வேளையில் மற்ற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரக்கூடிய வாகனங்கள் டீசலை பயன்படுத்தி இயக்கப்படுவது தொடா்கிறது. மாசு பிரச்னையை பொருத்தமட்டில், உரிய இலக்கை எட்டுவதற்காக அருகாமையில் உள்ள மாநிலங்கள் உள்பட அனைத்து பங்குதாரா்களின் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. ஆகவே, வாகன மாசு பிரச்னையை கையாளுவதற்கு உங்கள் ஆதரவை அளிக்கும் வகையில் அக்டோபா் 1-ஆம் தேதியில் இருந்து தில்லிக்கு பிஎஸ்- 6 ரக பேருந்துகளை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) மாசு தர நிா்ணயம் என்பது மோட்டாா் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசுபடுத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தர நிா்ணயம் ஆகும். பாரத் ஸ்டேஜ்-6 மாசு விதிகள், நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.