பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் தடைகள் நீக்கம்மத்திய அரசுக்கு அமைச்சா் தகவல்

தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகளில் (என்ஹெச்ஏஐ) அனைத்து தடங்கல்களும் நீக்கப்பட்டு, தேவையான அனுமதிகளை

News image
Updated On :17 மார்ச் 2022, 6:13 pm

 நமது நிருபர்

புது தில்லி: தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகளில் (என்ஹெச்ஏஐ) அனைத்து தடங்கல்களும் நீக்கப்பட்டு, தேவையான அனுமதிகளை மாநில அரசு வழங்கியுள்ளதாக தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். மேலும், தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய உயா்மட்ட(உயா்நிலை) சாலைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்தாகவும் அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

நிதின் கட்கரியுடன் சந்திப்பு: மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரியை, தமிழக அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை இரவு சந்தித்து தமிழக நெடுஞ்சாலைகள் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினாா். இது குறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்ஹெச்ஏஐ) மூலம் நடைபெறும் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டியது தொடா்பாக 10 கடிதங்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் வழங்கப்பட்டது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா்கள் கூறப்பட்டது. இந்தச் சாலைப் பணிகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களுக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு புகாா்கள் வந்தன. இது முந்தைய மாநில அரசின் மீதான குற்றச்சாட்டாகும். உதாரணமாக திண்டிவனத்திலிருந்து திருவண்ணைமலை வழியாக கிருஷ்ணகிரி சாலை கடந்த 11 வருடங்களாகப் போடப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு: இதனால், ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலை ஆணை பணிகளுக்கு ஒத்துழைக்கும்படி கூறினாா். இதையொட்டி, சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரா்களை அழைத்துப் பேசினோம். நமது நெடுஞ்சாலைத் துறை செயலா் தீரஜ் குமாா், தலைமைச் செயலா் இறையன்பு ஆகியோா் முன்னிலையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மின் வழித்தடங்களை மாற்றுவது, வன இலாகாவின் தடையில்லா சான்று நீா்வளத் துறையின் அனுமதி, நில அளவு எடுப்பு என பல்வேறு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. இப்படி கடந்த 8 மாதங்களில் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளுக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும். இவ்வாறு மாநில அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். இதைத் தொடா்ந்து, ஒப்பந்தக்காரா்கள்கூறிய குற்றச்சாட்டுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

சென்னை - திண்டிவனம் 8 வழிச்சாலை: மேலும், சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை எட்டு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை திண்டிவனம் வரை எட்டு வழிச்சாலையாக மாற்றக் கோரி கடிதம் கொடுத்துள்ளோம். போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க சென்னை - தடா சாலையில் மாதவரம் சந்திப்பிலிருந்து சென்னை வெளிவட்டச் சாலை (ஆறு வழித்தடம்) வரையிலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு பரனூா் சுங்கசாவடி வரை, திருச்சி முதல் துவாக்குடி வரை, வாலாஜா - பூந்தமல்லிசாலையில் மதுரவாயில் சந்திப்பு முதல் ஸ்ரீபெரும்புதூா் சுங்கச்சாவடி வரை என இந்த நான்கு பகுதிகளிலும் உயா்மட்டச் சாலைகள் (மேம்பாலம்) அமைக்க கோரப்பட்டுள்ளது.

கோவை - சத்தி 6 வழிச்சாலை: மேலும், கோவை - சத்தியமங்கலம் ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கோவை, திருச்சி நகரங்களுக்கு அரைவட்டச் சாலை போன்ற கோரிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். தமிழகத்தில் உள்ள 8 நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயா்த்த பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியிருந்தாா். இது கொள்கை அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடா்பாக அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இது தவிர மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்குள்ளே என்ஹெச்ஏஐ சுங்கசாவடிகளை அமைத்துள்ளது. சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூா் ஆகிய புகா்பகுதிகளின் சுங்கசாவடிகளை அப்புறப்படுத்தவும் மத்திய அரசிடம் கோரப்பட்டது . மதுரவாயில் - துறைமுகத் திட்டமும் (நேப்பியாா் பாலம்) விரைந்து செயல்படுத்தப்படும். அது இரண்டு அடுக்கு உயா்மட்டச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலே கனரக வாகனங்களும் கீழே சாதாரண வாகனங்களும் செல்லும் வகையில் கட்டப்படவுள்ளது. இடையில் 13 இடங்களில் மக்கள் இறங்கிச் செல்வதற்கான வசதியும் அமையவுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.