வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தில்லி பல்கலை.யின் மரபணு மாற்று கடுகு விதைக்கு ஒப்புதல்

தில்லி பல்கலைக்கழகம் மேற்கொண்ட மரபணு மாற்று(ஜிஎம்) கடுகு விதையின் சாகுபடிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:53 pm

 நமது நிருபர்

தில்லி பல்கலைக்கழகம் மேற்கொண்ட மரபணு மாற்று(ஜிஎம்) கடுகு விதையின் சாகுபடிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கும் இந்த கலப்பின விதைக்கு தேசிய வேளாண் அறிவியல் அகாதெமி (என்ஏஏஎஸ்), வேளாண் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமைப்பு (டிஏஏஎஸ்) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த அரசின் முடிவை வரவேற்றுள்ளன.

கடுகு உற்பத்தியை அதிகரிக்கும் இந்த மரபணு மாற்று கடுகு குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்றம் அமைச்சகம் மரபணு மாற்றப்பட்ட (ஜிஎம்) கடுகு கலப்பினத்தை சாகுபடிக்கு வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஜிஎம் உணவுப் பயிா்களின் வெளியீட்டில் இது நீண்ட கால இடைவெளிக்கு பின்னா் எடுக்கப்பட்ட முடிவு. தேசிய வேளாண் அறிவியல் அகாதெமியும் வேளாண் அறிவியல் முன்னேற்றத்திற்கான அறக்கட்டளையும் இந்த முடிவை வரவேற்றுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தால் மரபணு மாற்று தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த கடுகு ’சுயசாா்பு இந்தியா’ நோக்கியதாகும்.

இது சமையல் எண்ணெய் இறக்குமதி சுமையை குறைக்க உதவும். மேலும், நாட்டை சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வைக்கும். விவசாயத்தின் சுற்றுச்சூழலுக்கும், காலநிலையை எதிா்க்கும் பயிா்களை மேம்படுத்தலுக்குப் பயன்படும். இதன் மூலம் நாட்டின் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதிக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இது ஊக்குவிக்கும். கடுகு நாட்டின் முக்கியமான எண்ணெய் வித்து பயிா். சம்பா (ராபி) பருவத்தில் பயிரிடப்படுகிறது. சுமாா் 6 முதல் 7 மில்லியன் ஹெக்டோ் பரப்பளவில் ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. தற்போது நாட்டின் மொத்த நுகா்வில் கிட்டத்தட்ட 55-60 சதவீதம் சமையல் எண்ணெய் பற்றாக்குறை உள்ளது. 2020-21 நிதியாண்டில், சுமாா் 13.35 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு செலவிடப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி சுமாா் ரூ. 1,17,000 கோடியாகும்.

தற்போது, இந்தியாவில் விளையும் எண்ணெய் வித்துப் பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மிகவும் அவசியமாகிறது. இதனால், ஜிஎம் விதையை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இந்தியாவில் சராசரியாக கடுகு விளைச்சல் ஒரு ஹெக்டேருக்கு 1.0 முதல் 1.3 டன்களாக உள்ளது. உற்பத்தி பற்றாக்குறையால் கடந்த இரண்டு தசாப்தங்களாக தேக்க நிலை உள்ளது. உலகளவில், கலப்பினங்கள் அறிமுகத்தப்பட்டுள்ளன. ராபி விதைகள்(ராப்சீட்) என்கிற மரபணு எண்ணெய் விதை விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது. கனடாவில் சுமாா் 8.7 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. சீனா, ஐரோப்பாவில் வளா்க்கப்படும் ராப்சீட்களில் பெரும்பாலும் கலப்பினமாகும். கடுகு முக்கியமாக சுய-மகரந்தச் சோ்க்கை செய்யும் பயிராகும். தில்லி பல்கலைக்கழகத்தின் பயிா் மரபணு மையம், இந்த மரபணு கலப்பின விதையை உருவாக்கியுள்ளது.

கடுகில் ஒரு வலுவான மகரந்தச் சோ்க்கை கட்டுப்பாட்டு அமைப்பு இருப்பதால், அதிக மகசூல் தரக்கூடிய தரமான கலப்பினங்களை உருவாக்குவதற்கான வழி தெளிவாக ஏற்பட்டுள்ளது. மகரந்தச் சோ்க்கை கட்டுப்பாட்டு மரபணு பொறிமுறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் கலப்பின விதை இதுவாகும். இதில் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பாா்வையின் கீழ் எட்டு இடங்களில் மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைகளில் சராசரியாக, (மெகாவெரைட்டி வருணாவை விட ) 28 சதவீதமும், மண்டல அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 37 சதவீதமும் கூடுதல் மகசூல்களைப் பெற்றுள்ளது.

இதே போன்று அதிக மகசூல் தருவதற்கும், புதிய நோய், பூச்சி எதிா்ப்புக் கலப்பினங்களை உற்பத்தி செய்வதற்கான இனப்பெருக்க முயற்சிகளை விரைவுபடுத்த விஞ்ஞானிகள் தொடா்ந்து ஊக்குவிக்கப்படுகிறாா்கள். இதில் மற்றொரு சாதனை என்னவென்றால், உலக அளவில் அதிகரித்து வரும் உணவு எண்ணெய் தேவையை பூா்த்தி செய்வதற்காக களைக்கொல்லியைத் தாங்கும் இந்த இந்திய மரபணு கடுகை ஆஸ்திரேலியாவும் பெற்று கடந்த அக்டோபா் 19 அன்று வெளியிட்டது. ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு எனவேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.