தேசிய தொழில்நுட்ப ஜவுளியில் 20 உத்தி சாா்ந்த திட்டங்களுக்கு அனுமதி
மத்திய அரசின் முன்னுரிமைத் திட்டமான தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி, ஸ்மாா்ட் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 20 உத்தி சாா்ந்த ஆய்வு திட்டங்களுக்கு


மத்திய அரசின் முன்னுரிமைத் திட்டமான தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி, ஸ்மாா்ட் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 20 உத்தி சாா்ந்த ஆய்வு திட்டங்களுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் அனுமதியளித்துள்ளாா்.
இந்த ஆய்வு திட்டங்களுக்கு ரூ. 74 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் புதன்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உத்திக்கான திட்டத்தோடு ‘ஆத்மநிா்பா் பாரத்’ என்கிற சுயசாா்பு இந்தியா திசைக்கான படி எனவும் ஜவுளித்துறை அமைச்சக குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜவுளித் துறையில் பயன்பாட்டுக்குரிய பகுதிகளில் தயாா்படுத்துவதற்கான உத்திகளில் பாதுகாப்பு உடைகள் (2) விளையாட்டு ஆடை ஜவுளி (1), சிறப்பு இழைகள்(5), விவசாய ஜவுளி(6), ஸ்மாா்ட் டெக்ஸ்டைல்ஸ் என்கிற எண்ம ஆடைகள்(2), ஆக்டிவ் வோ் ஜவுளி என்கிற செயலில் உடைகள்(1), புவியியல் சாா்ந்த ஜவுளி (2), உத்தி பயன்பாட்டு பகுதி (1) உள்ளிட்ட 20 ஆய்வு திட்டங்களுக்கு நவம்பா் 1-ஆம் தேதி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு புதன்கிழமை மத்திய ஜவுளி வா்த்தம் மற்றும் தொழில்துறை, உணவுத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பல்வேறு துறை அமைச்சகங்களின் அதிகாரிகள், ஆகியோருடன் இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடா்பான தனது கருத்துகளை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநா்களுடன் பகிா்ந்துகொண்டாா்.
அப்போது கோயல் பேசியது வருமாறு: இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாட்டுத் துறைகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டின் வளா்ச்சிக்கு தொழில் மற்றும் கல்வித்துறை இணைப்புகள் அவசியம். கல்வியாளா்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளா்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது காலத்தின் தேவை. மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த தொழில்நுட்ப ஜவுளித்துறையின் எதிா்கால வளா்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநா்கள், விஞ்ஞானிகள், கல்வியாளா்கள் இணைந்து தங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம்.
இந்தியாவில் சிறப்பு இழைகளின் முக்கிய பயன்பாடு இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தின் உள்நாட்டுமயமாக்கல் இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலகளாவிய நிலப்பரப்பில் நிலைத்த தன்மையுடன் வலுவாக கால் பதிக்க தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கான இயந்திரங்கள், உபகரணங்களின் வலுவான உள்நாட்டுமயமாக்கல் அவசியம். இதற்கு தொழில்துறை, கல்வித்துறை ஆகிய இரண்டின் கூட்டுத் தலையீடுகள் தேவை என பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஐஐடிகள், அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனம், பிரபல தொழிலதிபா்கள், முன்னணி இந்திய நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...