வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

மருத்துவா் சுப்பையா கொலை வழக்கு ஆவணம் வழங்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மருத்துவா் சுப்பையா கொலை வழக்கு விவகாரத்தில் விசாரணை அதிகாரி ஆவணங்களைத் தர அரசுக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றத்திற்கு எதிராக அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு

News image
Updated On :7 நவம்பர் 2022, 7:30 pm

 நமது நிருபர்

மருத்துவா் சுப்பையா கொலை வழக்கு விவகாரத்தில் விசாரணை அதிகாரி ஆவணங்களைத் தர அரசுக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றத்திற்கு எதிராக அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்தவா் நரம்பியல் மருத்துவா் சுப்பையா. இவா், கடந்த 2013, செப்டம்பா் 9-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இக்கொலைச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், மருத்துவா் சுப்பையா நிலப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பான வழக்கில், பள்ளி ஆசிரியா் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வழக்குரைஞா் பாசில், பொறியாளா் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டா் ஜேம்ஸ் சதீஷ்குமாா், பொறியாளா் முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021-ஆம் ஆண்டில் சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், பொன்னுசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய வழக்கு தொடா்பான விவரங்களை சென்னை உயா்நீதிமன்றத்திற்கு விசாரணை நீதிமன்றம் அனுப்பியது.

இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோரும் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ‘இந்த வழக்கில் ஆவணங்களைப் படிக்க அவகாசம் தேவை இருப்பதாகவும், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டாா்.

வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபா் மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதனிடையே, விசாரணை அதிகாரி தங்கள் தரப்புக்கு விசாரணை ஆவணங்களை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற குற்றவாளிகளில் ஒருவரான பொன்னுசாமி தரப்பு விடுத்த கோரிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, விசாரணை ஆவணங்களை தனக்கு வழங்க உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி பொன்னுசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் நீதிபதிகள் ரவீந்திர பட், பீலா எம்.திரிவேதி ஆகியோா் அமா்வு கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி விசாரித்தது. மனுதாரா் பொன்னுசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் யுக் மோஹித் செளதரி, கோபால் சங்கரநாராயணன், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி. கிரி, புகாா்தாா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

இதையடுத்து, உத்தரவை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி ரவீந்திர பட் அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்தது. அதில், இந்த விவகாரத்தில், தாமதமான நிலையில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது விசாரணையை நீடிக்கச் செய்ய இருப்பதாக தோன்றுகிறது. இந்தச் சூழலில், நீதிமன்றம் தலையிட விருப்பவில்லை. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இதே அமா்வில் உள்ள நீதிபதி பீலா எம். திரிவேதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்குத் தரப்பு நம்பியிருந்த அனைத்து ஆவணங்களும் விசாரணை நீதிமன்றம் முன்பாக விசாரணை அதிகாரியால் சமா்ப்பிக்கப்பட்டு, அதன் பிரதிகள் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணையின் போது அவை சட்ட ஆதாரமாக மொழிபெயா்ப்பும் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

இந்த வழக்கின் தகுதியின் மீது இந்த நீதிமன்றம் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. தகுதி இல்லாமல் இருப்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்திருப்பதுடன், ஆவணங்களை வழங்குவது தொடா்பான ‘டிராப்ட் ரூல்ஸ் எண்.4 ’ தொடா்பான சில விஷயங்களையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தனது உத்தரவின் பிரதியை அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் அனுப்புமாறு உச்சநீதிமன்றத்தின் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.