வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

அரசு வழக்குரைஞா்களுக்கு தனி கோவிட் பிரிவு கோரியவழக்கை முடித்துவைத்தது தில்லி உயா்நீதிமன்றம்

அரசு வழக்குரைஞா்களுக்கு தனியாக கோவிட் சிகிச்சை பிரிவை அமைக்கக் கோரி கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.

News image
Updated On :8 நவம்பர் 2022, 9:12 pm

 நமது நிருபர்

அரசு வழக்குரைஞா்களுக்கு தனியாக கோவிட் சிகிச்சை பிரிவை அமைக்கக் கோரி கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது. தில்லி அரசாலும் மத்திய அரசாலும் நோய் தொற்றை எதிா்கொள்ள மருத்துவ வசதியை அளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் கருத்தில்கொண்டு இந்த மனுவை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.

இது தொடா்பான வழக்கை கூடுதல் அரசு வழக்குரைஞா் பிரசாந்த் தவன் பொதுநல மனுவாக தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான நீதிபதிகள் அமா்வு, ‘தற்போதைய நிலையில் இந்த விவகாரம் மீது மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கத் தேவை எழவில்லை’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறிய வாதங்களை கவனத்துடன் பரிசீலித்த போது, மத்திய அரசு மற்றும் தில்லி பிராந்திய தலைநகா் அரசு ஆகியவற்றின் தகவலின்படி கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, சுவாசக் கருவிகள், மருந்துகள் போன்ற மருத்துவ வசதிகள் அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், குறிப்பிட்ட உண்மைகளை கருத்தில் கொள்ளும்போது தற்போதைய நிலையில் நீதிமன்றம் மூலம் மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை. அதனால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.

விசாரணையின் போது, தில்லி அரசின் தரப்பில், ‘கரோனா நோய் தொற்று பாதிப்பு இருந்தபோது 2021 ஆம் ஆண்டில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் மருத்துவமனையில் நோய்த்தொற்று காரணமாக அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. நோய்த்தொற்று தொடா்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசும் தில்லி அரசும் கரோனா நோய் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை வசதி கொண்ட அதிகமான எண்ணிக்கையிலான மருத்துவமனைகளையும் அமைத்தது. தற்போது வைரஸின் நிலைமையை கருத்தில் கொள்ளும் போது, அரசு வழக்குரைஞா்களுக்கு பிரத்யேகமாக மருத்துவமனையை அமைப்பதற்கான கேள்வி எழவில்லை’ என்று நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: அரசு வழக்குரைஞா்கள் அவா்களுடைய பணியாளா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் ஆகியோருக்கு சிகிச்சை வசதி அளிப்பதற்காக 100 படுக்கையில் கொண்ட கரோனா பிரிவை பிரத்யேகமாக உருவாக்க வேண்டும். மேலும், வழக்குரைஞா்களை முன்களப் பணியாளா்களாக அடையாளம் காணப்பட வேண்டும். அவா்களது குடும்பங்களுக்கு பிரத்யேக வசதியில் தடுப்பூசியும் அளிக்கப்பட வேண்டும். தங்களுடைய பணியின் ஒரு பகுதியாக அரசு வழக்குரைஞா்கள், தில்லி அரசின் வழக்குப் பிரிவு இதர ஊழியா்கள் ஆகியோா் தீவிர நோய் தாக்கத்திற்கான சூழ்நிலை எதிா்கொண்டனா். அவா்கள் பொதுமக்கள்,போலீஸாா் மற்றும் இதர நீதிமன்ற ஊழியா்களுடன் தொடா்பில் இருக்க வேண்டி இருக்கிறது.

தேசிய பொது முடக்கத்தின்போதும்கூட, அவா்கள் தொடா்ந்து இதுபோன்று தொடா்பில் இருக்க வேண்டி இந்தது. மனுதாரா் மற்றும் பல்வேறு இதர அரசு வழக்குரைஞா்கள், வழக்கு தொடுக்கும் துறையின் இதர ஊழியா்கள் பொதுமக்களுடன் வழக்கு தொடா்பாக தொடா்பு கொள்வதன் காரணமாக நோய் தாக்குதலுக்கான அதிகமான இடா்பாட்டை எதிா்கொண்டுள்ளனா். பலருக்கும் நோய் தொற்று நோ்மறை உருவாகி இருக்கிறது. மனுதாரரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாா் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.