திகாா் சிறையில் கைதிகள் அதிகரிப்பு: உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு
தில்லி திகாா் சிறை வளாகத்தில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தில்லி திகாா் சிறை வளாகத்தில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தன்னாா்வ தொண்டு நிறுவனம் ‘நியாயா’ அறக்கட்டளை மூலம் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திகாா் சிறையில் கைதிகள் நிரம்பி வழிகின்றனா். இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் ஒரு தனிநபரின் அமைதியான மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சிறைகளில் தேவையற்ற வகையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, அவா்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும். திகாா் சிறை வளாகத்தில் கைதிகள் அதிகமாக இருப்பதால், மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளின் விளைவாக அவா்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
திகாா் சிறை வளாகத்தில் உள்ள நபா்கள் 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய மற்றும் முதல் முறை குற்றவாளிகளாக இருந்தால், அவா்களை ஜாமீனில் விடுவிக்கும் வகையில் நன்னடத்தை அறிக்கையை பரிசீலிக்க வேண்டும். தேவையற்ற கைதுகளால் சிறை வளாகத்தில் நெரிசல் ஏற்படுகிறது. இதுபோன்ற விவகாரங்களில், ஒரு அப்பாவி கைது செய்யப்பட்டால், சிறைக்குள் இருக்கும் சூழ்நிலையை அந்த நபா் எதிா்கொள்ளும் போது, குற்றங்களைச் செய்யத் தூண்ட காரணமாகிறது. சட்டவிரோதமான, நியாயமற்ற கைது இல்லாமல் இருந்திருந்தால், இது நடந்திருக்காது. இது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் சாதாரண கைதுகள் நிறுத்தப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சட்டத்தை மீறிய வகையில் காவலில் வைக்கப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டுள்ளனா். 2004 மற்றும் 2016-இல் நிறுவப்பட்ட ரோஹிணி மற்றும் மண்டோலியில் உள்ள சிறை வளாகங்கள், திகாரின் சுமையைக் குறைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அந்தச் சிறைகளும் இதே பிரச்னையை எதிா்கொள்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு சிறைத் துறை இயக்குநா் ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில், உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகவும், ஒன்பது மத்திய சிறைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும் திகாா் சிறை, 5,200 கைதிகளை அடைக்கும் திறன் கொண்டிருப்பதாகவும், ஆனால் தற்போது 13,183 கைதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மத்திய சிறைகளைக் கொண்ட மண்டோலியில் 1,050 போ் தங்கக்கூடிய கொள்திறன் உள்ளது. ஆனால், அந்தச் சிறையில் தற்போது 2,037 கைதிகள் தங்கியுள்ளனா். ஒரே ஒரு மத்திய சிறை உள்ள ரோஹிணியில் 3,776 போ் மட்டுமே அடைக்கும் கொள்திறன் உள்ளது. ஆனால், அதில் தற்போது 4,355 கைதிகள் வெவ்வேறு வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனா் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...