தில்லி கலால் கொள்கை வழக்கில் 2 தனியாா் நிறுவன நிா்வாகிகள் கைது
தில்லி அரசின் கலால் கொள்கை வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி இரண்டு தனியாா் நிறுவன நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.


புது தில்லி: தில்லி அரசின் கலால் கொள்கை வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி (பிஎம்எல்ஏ) இரண்டு தனியாா் நிறுவன நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இது குறித்து அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:
பொ்னோட் ரிக்காா்டின் என்கிற மதுபான நிறுவனத்தின் பொது மேலாளா் பெனாய் பாபு, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அரபிந்தோ பாா்மாவின் இயக்குநரான பி.சரத் சந்திர ரெட்டி ஆகியோா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையைத் தொடா்ந்து, இவா்கள் இருவரும் தில்லி அரசு அதிகாரிகளுடன் இணைந்து தில்லி கலால் கொள்கையை உருவாக்குவதில் ஈடுபட்டதற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளன. சோதனையின் போது ‘வரைவு கலால் கொள்கை’ ஆவணங்கள் இவா்களில் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சில்லறை மதுபான வணிகத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட இருவரும் தில்லி சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு இதுவரை பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இந்த வழக்கில் முதலில் ‘இண்டோஸ்பிரிட்’ மதுபான உற்பத்தி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சமீா் மஹந்த்ருவை கைது செய்தது. பின்னா், இம்மாத தொடக்கத்தில் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் தனி உதவியாளா் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி கலால் கொள்கை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பெயா் சோ்க்கப்பட்டு, அவா் தொடா்புடைய இடங்களிலும், தில்லி அரசின் சில அதிகாரிகளின் இடங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது. மேலும், பொழுதுபோக்கு வணிக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி விஜய் நாயா், மற்றோரு மதுபான தொழிலதிபா் அபிஷேக் போயின்பள்ளி ஆகியோரையும் கைது செய்தது.
2021-22 தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, சிபிஐ விசாரணை தொடங்கியது. இது தொடா்பாக தில்லி அரசின் கலால் துறை அதிகாரிகள் 11 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...