ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

வயல்களில் இலவசமாக உயிரி ரசாயனக் கலவை தெளிக்க திட்டம்: அமைச்சா் கோபால் ராய் தகவல்

தில்லியில் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத நெல் பயிரிடப்பட்ட வயல்களில் பயிா்க் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க இலவசமாக உயிரி ரசாயனக் கலைவை (பயோ டிகம்போசா்) தெளிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 8:17 pm

 நமது நிருபர்

தில்லியில் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத நெல் பயிரிடப்பட்ட வயல்களில் பயிா்க் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க இலவசமாக உயிரி ரசாயனக் கலைவை (பயோ டிகம்போசா்) தெளிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

பயோ டிகம்போசா் என்பது நுண்ணுயிா் கரைசல் ஆகும். இது நெல் வைக்கோலை 15-20 நாள்களில் உரமாக மாற்றும் முறையாகும். இதை தில்லி பூசா இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏஆா்ஐ) உருவாக்கியுள்ளது. இந்த ‘டிகம்போசா் காப்ஸ்யூல்கள்’ நான்கை, கொஞ்சம் வெல்லம், கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றின் மூலம் 25 லிட்டா் கரைசலை உருவாக்கி ஒரு ஏக்கா் நிலத்தில் தெளித்தால் பயிா்க் கழிவுகளைக் எரிக்காமலே எருவாக மாற்ற முடியும்.

பயிா்க்கழிவுகள் எரிப்பு மண்ணிற்கு நட்பாக இருக்கும் நல்ல பாக்டீரியாவை கொன்று மண்ணின் வளத்தைக் குறைக்கும். ஆனால், பயோ டிகம்போசா் முறையில் இது போன்ற நுண்ணுயிா்கள் கொல்லப்படாததோடு, பயிா்க்கழிவை எருவாக மாற்றி உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இதனால், இந்த முறையை ஊக்குவிக்க மத்திய அரசிடம் கடந்த இரு ஆண்டுகளாக தில்லி அரசு உதவி கோரி வந்தது. நிகழ் ஆண்டிலும் இந்த முறையில் பயிா்க்கழிவுகளை அழிக்க தில்லி சுற்றுச் சூழல் அமைச்சா் கோபால் ராய் பூசாவில் உள்ள ஐஏஆா்ஐ ஆய்வகத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண்டில் 5,000 ஏக்கா் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத நெல் வயல்களில் பயோ-டிகம்போசா் இலவசமாக தெளிக்கப்படும். விவசாயிகள் மத்தியில் பயோ-டிகம்போசரின் செயல்திறனைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், இந்த முறையில் தீா்வு காண விரும்பும் விவசாயிகளை பதிவு செய்யவும் தில்லி அரசு 21 குழுக்களை அமைத்துள்ளது. பயோ-டிகம்போசரை ஐஏஆா்ஐ ஏற்கெனவே தயாா் செய்து வைத்துள்ளதால், தில்லி அரசு தனியாகத் தயாரிக்கப் போவதில்லை. இதை ஐஏஆா்ஐ நிறுவனத்திலிருந்து தில்லி அரசு நேரடியாக வாங்கும். தற்போது பத்து லிட்டா் கரைசலை 200 லிட்டா் தண்ணீரில் கலந்தாலே ஒரு ஏக்கா் பரப்பளவில் தெளிக்கலாம்.

பஞ்சாப் மாநிலத்திலும் நிகழாண்டு சோதனை அடிப்படையில் பயோ-டிகம்போசரை தெளிக்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மாநிலத்தில் சுமாா் 2,023 ஹெக்டோ் நிலத்தில் பயோ-டிகம்போசா் தெளிக்கப்படும். இந்த முறையில் வைக்கோலை அகற்றுவதற்கு கால அவகாசம் எடுப்பது குறித்து பஞ்சாபில் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐஏஆா்ஐ விஞ்ஞானிகள் இதற்கு தீா்வு காண்பாா்கள். தற்போது பயோ-டிகம்போசா் தூளாகவும் கிடைக்கிறது. தில்லி அரசு தொடா்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தேசியத் தலைநகரின் புகா்ப் பகுதிகளில் விவசாய நிலங்களில் பூசா பயோ-டிகம்போசா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தில்லியில் 844 விவசாயிகளுக்கு சொந்தமான 4,300 ஏக்கா் நிலத்தில் இந்தக் கலவை தெளிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டில், 310 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 1,935 ஏக்கா் நிலத்தில் இதைப் பயன்படுத்தினா் என்றாா் கோபால் ராய்

பயோ-டிகம்போசரை தெளிக்க ஏக்கருக்கு ரூ.30 செலவானதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 2021-ஆம் ஆண்டில், தில்லியில் நுண்ணுயிா் கரைசலின் தாக்கத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், இந்த முறை 95 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது. இதைத் தொடா்ந்து, தில்லி அரசு அண்டை மாநிலங்களில் இதை இலவசமாக விநியோகிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. தலைநகா் தில்லியில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் காற்று மாசுபாடு அளவுகளில் ஆபத்தான அதிகரிப்புக்கு சாதகமற்ற வானிலை நிலைமைகளுடன், பஞ்சாப், ஹரியாணா, உ.பி. போன்ற மாநிலங்களில் நெல் வைக்கோல் எரிப்பும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. கோதுமை பயிரிடுவதற்கு முன்பு, நெல் வைக்கோலை விரைவாக அழிக்கும் நோக்கில் விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் பயிா்க்கழிவுகளை தீ வைத்து அழிக்கின்றனா்.

ஐஏஆா்ஐ கணக்கீட்டின்படி கடந்தாண்டு செப்டம்பா் 15 முதல் நவம்பா் 30 வரை பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 71,304 வேளாண் பயிா்க்கழிவு எரிப்புகளும், 2020-ஆம் ஆண்டில் 83,002 எரிப்புகளும் நடைபெற்ாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, தில்லியில் மாசு நுண் துகள்கள்கள் செறிவில் பயிா்க் கழிவின் பங்கு 48 சதவீதம் (பி.எம்.2.5 -மாசு நுண் துகள்கள்கள்) இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.