இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ரவிச்சந்திரன் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, நளினி தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த செல்வம் ஆகியோா் ஆஜராகினா். அவா்கள் நீதிபதிகள் அமா்விடம், ‘கரோனா சூழலில் சிறையில் நெருக்கத்தைக் குறைக்கும் வகையில், உச்சநீதிமன்றம் அளித்த பொதுவான உத்தரவின் அடிப்படையில் மனுதாரா்கள் இருவருக்கும் பரோல் அளிக்கப்பட்டு மாதம் தோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பரோலில் கட்டுப்பாடுகள் உள்ளதால், இருவருக்கும் ஜாமீன் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே ஒருவரது வழக்கு (பேரறிவாளன்) விசாரிக்கப்பட்டு தீா்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்றனா்.