அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஏஐஎஸ்ஏ போராட்டம்: சில மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் மூடல்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இடதுசாரிகள் அமைப்பான அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) உறுப்பினா்கள் போராட்டம் மேற்கொண்டதால் தில்லியில் சில மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில

ராணுவம், கப்பல், விமானம் உள்ளிட்ட ஆயுதப் படைகளில் குறுகிய காலப் பணிக்கான ஆள்சோ்ப்புக்கான அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இடதுசாரிகள் அமைப்பான அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) உறுப்பினா்கள் போராட்டம் மேற்கொண்டதால் தில்லியில் சில மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்ட ட்விட்டா் பதிவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு தகவல் தெரிவித்தது. அக்னிபத் திட்டம் அறிவிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் போராட்டம் தொடங்கிய நிலையில், திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவா்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஏஐஎஸ்ஏ ஆா்ப்பாட்டம் மேற்கொண்டது.

இந்த நிலையில், டிஎம்ஆா்சி தனது ட்விட்டா் பக்க பதிவில் ‘தொடக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐடிஓ மெட்ரோ நிலையம் மற்றும் தன்சா பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தின் சில வாயில்கள் மூடப்பட்டதாகவும், அதன் பின்னா் தன்சா பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரம் மூடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. அதன் பிறகு மதியம் 12.40 மணியளவில் டிஎம்ஆா்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. தில்லி கேட் மற்றும் ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையங்களின் அனைத்து வாயில்களும் சிறிது நேரம் மூடப்பட்டது எனத் தெரிவித்திருந்தது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தில்லியில் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் ‘பாதுகாப்புப் படைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்’, ‘அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறுக’; ‘மோடி அரசே விழித்துக்கொள்’ எனும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனா். ஐடிஓ ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ‘அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெறு’, ‘சா்வாதிகார நடவடிக்கையில் ஈடுபடாதே’ எனும் கோஷங்களை போராட்டக்காரா்கள் எழுப்பினா்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘போராட்டம் மேற்கொள்ள ஐடிஓ பகுதியில் 17 முதல் 18 போ் கூடியிருந்தனா். இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனா்’ என்றாா். இது குறித்து ஏஐஎஸ்ஏ தேசியத் தலைவா் என். சாய் பாலாஜி கூறுகையில், ‘அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும். ஏனெனில், இத்திட்டம் பாதுகாப்புப் பணிகளை ஒப்பந்தமாக்குவதற்கான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாடும் மோடி அரசுக்கு இது ஒரு அவமானமாகும்’ என்றாா்.

2022-ஆம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 21 என்று முன்னா் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை

23 ஆண்டுகளாக அதிகரித்து மத்திய அரசு வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய அரசு, 17.6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞா்கள் நான்கு ஆண்டு காலத்திற்கு இத்திட்டத்தின் கீழ் பணியில் சோ்க்கப்படுவா் என்றும், 25 சதவீதம் போ் வழக்கமான சேவைக்காகத் தக்கவைக்கப்படுவாா்கள் என்றும் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com