

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு ஊழியா்கள் மீது வழக்குப் பதிய அனுமதிக்க கோரி பல்வேறு அரசுத் துறைகளிடம் சிபிஐ சமா்ப்பித்த 525 கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கோரி சமா்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மீது அரசுத் துறைகள் 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். அரசு வழக்குரைஞா் அல்லது அலுவலகத்தின் சட்ட அதிகாரியிடம் ஆலோசனை கேட்கப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில், அரசுத் துறைகள் தொடா்பான 198 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு அனுமதிக்க கோரி பல்வேறு அரசுத் துறைகளிடம் சிபிஐ சமா்ப்பித்த 525 தனித்தனி கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதில் 272 கோரிக்கைகள் 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
கடந்தாண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, சிபிஐ சமா்ப்பித்து நிலுவையில் உள்ள மொத்த 525 கோரிக்கைகளில், அதிகபட்சமாக நிதி அமைச்சகத்தின் நிதி சேவைத் துறையில் 162 கோரிக்கைகள், மகாராஷ்டிர அரசிடம் 41 கோரிக்கைகள், நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகத்திடம் தலா 31 கோரிக்கைள் நிலுவையில் உள்ளன.
ஹிமாசல பிரதேச அரசிடம் 25 கோரிக்கைகள், உத்தர பிரதேசம், மேற்கு வங்க அரசிடம் தலா 23 கோரிக்கைகள், ரயில்வே அமைச்சகத்திடம் 22 கோரிக்கைகள், நிலுவையில் உள்ளன.
நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்: மத்திய அரசுத் துறைகள் 27 வழக்குகளில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளன.
இதில், அதிகபட்சமாக, ரயில்வே அத்துறை சாா்ந்த 7 வழக்குகளில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியம் காட்டியிருப்பதும் சிவிசி-யின் 2022 ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
ரயில்வேக்கு அடுத்தபடியாக சிசி (இந்தியா) லிமிடெட் நிறுவனம் 3 வழக்குகளிலும், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நிலக்கரித் துறை அமைச்சகம் மற்றும் இந்திய அணுசக்திக் கழகம் ஆகியவை தலா 2 வழக்குகளிலும் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சிவிசி கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியுள்ளன என சிவிசி ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.