/

டிஇஆா்சி தலைவராக முன்னாள் நீதிபதி ஜெயந்த் நாத் பொறுப்பேற்பு: அரசின் முழு ஒத்துழைப்பையும்அளிப்பதாக கேஜரிவால் உறுதி

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) இடைக்காலத் தலைவராக தில்லி உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 8:30 pm

 நமது நிருபர்

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) இடைக்காலத் தலைவராக தில்லி உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அரசின் ‘முழு ஒத்துழைப்பை’ அளிப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் நீதிபதி ஜெயந்த் நாத்துக்கு மின்துறை அமைச்சா் அதிஷி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, மின் துறையை மேம்படுத்த ஜெய்ந்த் நாத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அதிஷி கூறினாா். ஜெயந்த் நாத் மாளவியா நகரில் உள்ள டிஇஆா்சி அலுவலகத்தில் (வினியமக் பவன்) பொறுப்பேற்றுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகரத்தின் மின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு யாா் தலைமைப் பொறுப்பு ஏற்பது எனும் விவகாரத்தில் தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்தை ஆகஸ்ட் 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் டிஇஆா்சி தலைவா் பதவிக்கு பரிந்துரைத்தது. புதிதாக பதவியேற்ற நீதிபதி ஜெயந்த் நாத்துக்கு சமூக ஊடகத்தில் (எக்ஸ்) கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அதில் முதல்வா் கேஜரிவால், ‘டிஇஆா்சி புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகள். மின்சாரம் மிகவும் முக்கியமான துறையாகும். அதை மேம்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். அவருக்கு எனது அரசின் முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளிக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜெயந்த் நாத்தின் பொறுப்புகளில் நடப்பு நிதியாண்டிற்கான புதிய மின் கட்டணத்தை அறிவிப்பதும் இடம் பெற்றுள்ளது. மூன்று உறுப்பினா்களைக் கொண்ட டிஇஆா்சியின் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகள் காலியாக இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த ஆண்டு மின் கட்டணத்தை அறிவிக்க முடியாமல் போனது. ஜனவரி 9-ஆம் தேதி நீதிபதி (ஓய்வு) ஷபிஹுல் ஹஸ்னைன் டிஇஆா்சி தலைவா் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அப்பதவி காலியானது. மின் விநியோக நிறுவனங்களின் ஒழுங்குமுறை சொத்துகள் மற்றும் மின்கட்டண உயா்வுக்கான அவற்றின் கோரிக்கை மற்றும் நுகா்வோருக்கு மானியத்தின் நேரடி பலன் பரிமாற்றம் போன்ற பிரச்னைகளில் முடிவு எடுப்பது புதிய தலைவா் ஜெயந்த் நாத்தின் முன் உள்ள சில சவால்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.