/

பசுமையில்லா பட்டாசுகளை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் பசுமையில்லா பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்வதற்கான நெறிமுறைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசு மற்றும்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 8:29 pm

 நமது நிருபர்

நாடு முழுவதும் பசுமையில்லா பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்வதற்கான நெறிமுறைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசு மற்றும் பெட்ரோலியம் - வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனம் (பெஸோ) போன்ற ஒழுங்காற்று அமைப்புகளை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது. அப்போது, ‘விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அது கேலிக்கூத்தாக மாறிவிடும்’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு, தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மீதான தடையை அமல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை வழிமுறையை அமல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசு மற்றும் ஒழுங்காற்று அமைப்புகள் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் கேட்டுக் கொண்டது. மேலும், ‘அவா்களை (உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள்) வழிகாட்டுதல்களுக்கு இணங்கச் செய்வதற்கான ஒரு வழிமுறை நம்மிடம் இல்லையென்றால் அது கேலிக்குரியதாகிவிடும்’ என நீதிபதிகள் அமா்வு கூறியது.

இந்த வழக்கு விசாரணையின் போது, சில பட்டாசு உற்பத்தியாளா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் வாதிடுகையில், ‘பசுமைப் பட்டாசு விவகாரங்களை பெஸோ, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) போன்ற நிபுணா் அமைப்புகள் கையாண்டுள்ளன. தற்போது தரக் கட்டுப்பாடு விஷயம் மட்டுமே தீா்க்கப்பட வேண்டியுள்ளது. பசுமைப் பட்டாசுகளின் ரசாயன பாா்முலாக்கள் மற்றும் வழிகாட்டுதல்களை நிபுணா் குழுக்கள் உருவாக்கியுள்ளன. இப்போது உற்பத்தி மற்றும் விற்பனையை கண்காணிக்க பெஸோ அனுமதிக்கப்படும். பேரியம் உப்பு விவகாரத்தைப் பொருத்தமட்டில், உலகம் முழுவதும் பட்டாசு தயாரிப்பில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள உற்பத்தியாளா்கள் திறன்மிக்க வகையில் கண்காணிக்கும் பொருட்டு தமிழகத்தில் சிவகாசியில் ஆய்வுக்கூடம் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளனா்’ என்றாா்.

மற்றொரு மூத்த வழக்குரைஞா் வாதிடுகையில், ‘பட்டாசு தொழில் 8 லட்சம் பேருக்கு வேலை அளித்துள்ளது‘ என்றாா். கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பாட்டீ கூறுகையில், ‘பெஸோ போன்ற நிபுணத்துவ அமைப்புகள் பசுமை பட்டாசுகள் குறித்து பல முடிவுகளை எடுத்துள்ளன’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ஒழுங்குமுறை நெறிமுறைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு, செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாகத் தடை செய்யக் கோரி அா்ஜூன் கோபால் என்பவா் 2015-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைறப்பித்துள்ளது. சுற்றுச்சூலுக்கு உகந்த பசுமைப்பட்டாசு குறித்து நீரி அமைப்பு சில வரையறைகளை வகுத்துள்ளது.

கடந்த 2021 அக்டோபரில் இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசுகளைப் பயன்படுத்த தடை இல்லை என்றாலும், பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகள் தடைசெய்யப்படும் என்று கூறியிருந்தது. மற்றவா்களின் ஆரோக்கியத்தின் விலையில் கொண்டாட்டங்கள் இருக்க முடியாது என்றும், பல்வேறு மட்டங்களில் உள்ள உயா் அதிகாரிகள் தவறுகளுக்கு ‘தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்’என்றும் எச்சரித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.