/

அஸ்ஸாம் தேர்தலில் பாஜகவில் களமிறங்கும் பெண் வேட்பாளர்கள்!

பாஜக பெண் வேட்பாளர்கள் பற்றி..

News image

ஹிமந்த பிஸ்வ சர்மா

DPS

Updated On :25 மார்ச் 2026, 12:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் மீண்டும் கடும் போட்டி நிறைந்த தேர்தல் களத்துக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், தேர்தலுக்கு பாஜக களமிறக்கியுள்ள பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 2021-ஐக் காட்டிலும் 2026-ல் குறைந்துள்ளது.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் ஏப்ரல் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

அஸ்ஸாமில் பாஜக கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் களத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதன்படி, 2026 தேர்தல் களத்தில் இந்த முறை பாஜக ஆறு பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் ஏழு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் இருவர் வெற்றி பெற்றிருந்தனர்.

பாஜக சார்பில் போட்டியிடும் ஆறு பெண் வேட்பாளர்களுமே இந்த முறை வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். 2029 ஆம் ஆண்டிற்குள் சட்டரீதியாகப் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும். பாஜக 126 தொகுதிகளிலும் போட்டியிட்டால் இந்த இட ஒதுக்கீட்டின்படி 41 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும் என அவர் கூறினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 89 தொகுதிகளில் போட்டியிடுவதால், பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் 7 சதவீதம் மட்டுமே உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திதா கோர்லோசா மற்றும் அஜந்தா நியோக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த முறை அந்த எண்ணிக்கையை ஆறாக உயர்த்த எங்களால் முடியும் என்றார்.

ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான மாநில அமைச்சரவையில், நியோக் நிதியமைச்சர் பொறுப்பையும், கோர்லோசா விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தனர். அஸ்ஸாமின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை அஜந்தா நியோக் பெற்றுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பிர்சிங்-ஜாருவா தொகுதியில் மாதவி தாஸை பாஜக களமிறக்கியுள்ளது. அதேவேளையில், சமாரியாவில் ஜோத்ஸ்னா கலிதாவும், மங்கல்தாயில் நிலிமா தேவியும், கோலாகாட்டில் அஜந்தா நியோக்கும், திபு (பழங்குடியினர் தொகுதி) தொகுதியில் நிசோ தெராங்பியும், ஹப்லோங் (பழங்குடியினர் தொகுதி) ரூபாலி லங்தாஸா போட்டியிடுகின்றனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2016-ஆம் ஆண்டில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 91 பெண் வேட்பாளர்களில் வெறும் எட்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2021-ஆம் ஆண்டில் போட்டியிட்ட 76 பெண் வேட்பாளர்களில் ஆறு பேர் மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP has fielded six women candidates this time, one less than number of female contenders from the party in the 2021 assembly polls.In 2021, of the seven nominated candidates, two had won.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.