சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!
அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் பற்றி..

ஹிமந்த பிஸ்வ சர்மா - கௌரவ் கோகோய்
TNIE

ஹிமந்த பிஸ்வ சர்மா - கௌரவ் கோகோய்
TNIE
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் அரசைக் கைப்பற்ற இரு முனைப் போட்டி நிலவுகிறது.
அஸ்ஸாம் உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப். 23 ஆம் தேதியும், புதுவை, கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்துப் பேரவைத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
அஸ்ஸாம்
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு 2021-க்குப் பிறகு முதல்முறையாக ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தலைமையிலான கூட்டணி திட்டமிடும் அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
பாஜக சார்பில் அஸ்ஸாம் முதல்வரான ஹிமந்தபிஸ்வ சர்மாவும், காங்கிரஸ் சார்பில் கௌரவ் கோகோயும் முதல்வர் வேட்பாளர்களாக உள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் சமூக பிரச்னைகள் வழக்கமான தொடர்கதையாகவே உள்ளன. மண் அரிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, வளர்ச்சி, வெள்ளம், நலத் திட்டங்கள், ஊழல், அடையாள அரசியல் ஆகியவையும் இதில் அடங்கும்.
குறிப்பாக வங்கதேசத்தினர் என்ற மியா மக்கள் மாநிலத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கம், ஆதிவாசிகளான தேயிலைத் தோட்டப் பழங்குடியினர், சுடியா, கோச் - ராஜ்போங்ஷி, மட்டக், மோரன், தாய்-அஹோம் ஆகிய ஆறு சமூகங்கள் பழங்குடியினர் அந்தஸ்து கோரி நடத்தும் போராட்டம் மறுபக்கம்.
யார் இந்த மியா சமூகத்தினர்?
தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடியவர்களாக அஸ்ஸாமில் மியா மக்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். மியா என்ற சொல் வங்காள வம்சாவளி முஸ்லிம்களைக் குறிக்கிறது.
அஸ்ஸாமின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் தீவிரமாக உள்ள ஒரே கட்சியாக தங்களைக் கூறிக்கொள்ளும் பாஜக, சுமார் 50 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை வங்கதேச ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவித்ததாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் முஸ்லிம் ஆதரவாளர்கள் எனத் தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.
பழங்குடியினர் அந்தஸ்து கோரும் ஆறு சமூகங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், ஏற்கெனவே உள்ள பழங்குடியினரின் உரிமைகளைப் பாதிக்கும் என்று இவர்கள் போராடுகிறார்கள்.
இந்தச் சிக்கல் கிட்டத்தட்ட 30 பேரவைத் தொகுதிகளில் நிலவுகிறது. இதனால், பாஜகவுக்கு இருமுனைக் கத்தியாக மாறியிருக்கிறது இந்த பிரச்னை.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் காலமான பாடகர் ஜூபின் கர்க் மரணமும் அரசியலாகியிருக்கிறது. பாடகர் கர்கைக் கொன்றவர்களை பாஜக பாதுகாப்பதாகவும், காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.
கூட்டணிக் கணக்கு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக இம்முறை அஸ்ஸாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் ரபா ஹாசங் ஜௌதா மஞ்சா ஆகிய மூன்று கட்சிகள் இடம் பெறுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சில நாள்கள் முன் விலகிய ஐக்கிய மக்கள் கட்சி, போடோலாந்து பகுதியிலுள்ள 15 தொகுதிகளுடன் கூடுதலாக ஆறு தொகுதிகளிலும் பாஜக மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணிக் கட்சிகளை எதிர்த்துத் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கலாம் என்றே கருதப்படுகிறது.
யாரை நம்பி தேர்தல் முடிவுகள்?
அஸ்ஸாமின் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி, அங்குள்ள முஸ்லிம்கள் மற்றும் தேயிலை பழங்குடியினர்களின் ஆதரவை எந்தக் கட்சி பெறுகிறது என்பதிலேயே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.
பாஜக, தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு நில உரிமை வழங்குவதாகக் கூறி ஆதரவு கோருகிறது, அந்தஸ்து வழங்க அரசு காலம் தாழ்த்துவதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து ஆதரவு திரட்டுகிறது.
இது தவிர, ஆளும் கட்சி, பல்வேறு நலத் திட்டங்களைச் செய்து அதனைச் சொல்லி வாக்குக் கேட்டு வருகிறது.
காங்கிரஸின் சவால்கள்
2021 தேர்தலில் காங்கிரஸ் உடன் 11 கூட்டணிக் கட்சிகள் இருந்த நிலையில், அஸ்ஸாம் ஜாதியா பரிஷத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் அனைத்துக் கட்சி மலைவாழ் மக்கள் தலைவர்கள் மாநாடு ஆகிய நான்கு கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 65 தொகுதிகள் கிடைத்துள்ளது.
இதுதவிர அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ரைஜோர் தளம், திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.
சமூக செயற்பாட்டாளராக இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக மாறிய அகில் கோகோய் தலைமையிலான 'ரைஜோர் தளம்' தற்போது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, சில தொகுதிகள் குறித்த கருத்து வேறுபாடு சரி செய்யப்படாமல், காங்கிரஸும் ரைஜோர் தளமும் தனித்தனியே பிரிந்து சென்றன. எனவே, ரைஜோர் தளம், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்ற முஸ்லிம் ஆதரவு கொண்ட கட்சிகள் பிரிந்து சென்றதால், காங்கிரஸின் வாக்குகளும் பிரியலாம்.
அஸ்ஸாம் 2021 தேர்தல் - ஒரு பார்வை
2021 தேர்தலில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி காங்கிரஸ் கூட்டணியிலிருந்தது. அப்போது, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி போட்டியிட்ட 50 இடங்களில் 16 இடங்களை வென்றது. அதே தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களையும், பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் 75 இடங்களையும் வென்றிருந்தன.
விரிவாகப் பார்த்தால் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 என மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற்று, மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
பாஜக 60, அஸ்ஸாம் கண பரிஷத் 9, யுபிபிஎல் 6 என வெற்றி பெற்றிருந்தன. இதையடுத்து ஹிமந்த பிஸ்வ ஷர்மா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
மகோஜத் கூட்டணியில் காங்கிரஸ் 29, ஏஐயுடிஎஃப் 16, பிபிஎஃப் 4, சிபிஎம் 1 என வென்றிருந்தன.
2016, 2021 ஆகிய இரண்டு முறை பாஜக அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்திருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்தில் பாஜக களமிறங்கி, அதற்கான முழு முனைப்போடு செயல்பட்டு வருகின்றது.
மிகச் சிக்கலான சமூக அமைப்பையும், அதன் ஆதிக்கம் அதிகம் கொண்டதாக இருக்கும் பேரவைத் தேர்தலையும் அரசியல் பார்வையாளர்கள் கவனமுடன் உற்று நோக்கி வருகிறார்கள்.
பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? காங்கிரஸ் மீளுமா என்பதை மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தீர்மானிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...