புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேரளம்: காங்கிரஸ் கைப்பற்றுமா? அல்லது பினராயி 3.0 சாத்தியமா?

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவும் மும்முனைப் போட்டி பற்றி...

News image

கேரளத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

Photo credit - Chatgpt

Updated On :20 மார்ச் 2026, 10:12 am

எஸ். ரவிவர்மா

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸும், இரட்டை இலக்க வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கத்தில் பாஜகவும் களம் கண்டுள்ளன.

தமிழ்நாடு, கேரளம், புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 23 கடைசி நாளாகும்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.

கேரளத்தை பொருத்தவரை 1980 முதல் 40 ஆண்டுகளாக காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்து வந்த நிலையில், 2016 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மீண்டும் 2021 தேர்தலிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி கூட்டணி அரசின் முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்து வருகிறார்.

தற்போது 80 வயதை நிறைவு செய்யவுள்ள பினராயி விஜயனை மீண்டும் முதல்வர் வேட்பாளராக இடது முன்னணி கூட்டணி முன்னிறுத்தியுள்ளது.

மும்முனைப் போட்டி

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இருமுனைப் போட்டியாகவே இருந்த நிலையில், முதல்முறையாக மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுத் தனது சாதனையை திருத்தி எழுதும் முனைப்பில் பணியாற்றி வருகின்றது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றது. மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சியைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் காங்கிரஸ் களத்தில் நிற்கிறது.

இதனிடையே, 2016 தேர்தலில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக, 2021-ல் அந்த தொகுதியையும் மார்க்சிஸ்ட் கட்சியிடம் இழந்தது.

ஆனால், அதன் பிறகு பாஜக படிப்படியாக வளர்ச்சி அடைந்தது என்றால் மறுக்க முடியாது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 19 சதவீத வாக்குகளுடன் திருச்சூர் தொகுதியில் வெற்றியும் பெற்று மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸை அதிரவைத்தது.

தொடர்ந்து, கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தமாக 14.71 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றது. மாநகராட்சிகளில் மட்டும் 22.60 சதவீத வாக்குகளை பெற்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியையும் பாஜக கைப்பற்றியது.

இத்தகைய நிலையான வளர்ச்சியுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்க எண்களில் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் களமிறங்கியிருக்கிறது பாஜக.

மக்களவை, உள்ளாட்சி தேர்தல் முடிவு எதிரொலிக்குமா?

கேரளத்தை பொருத்தவரை தொடக்கத்தில் இருந்தே சட்டப்பேரவைத் தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் வெவ்வேறு மனநிலையுடன் வாக்காளர்கள் கையாண்டு வருவது வரலாற்றில் நிரூபணமான ஒன்று.

2019 மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

ஆனால், 2016 சட்டப்பேரவைத் தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, 2021-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தது.

2024 மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸும், தலா ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2025 உள்ளாட்சித் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கட்சியைவிட அதிக இடங்களில் காங்கிரஸே வெற்றி பெற்றுள்ளது.

2021 பேரவைத் தேர்தலைப் போன்று மக்கள் முடிவெடுப்பார்களா? அல்லது மாற்றி யோசிப்பார்களா? என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

சாதக - பாதகங்கள்

கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சமூக நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நிகழ்த்திய சாதனைகளை இடது ஜனநாயக முன்னணி நம்பியிருக்கிறது.

முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என மொத்தம் 62 லட்சம் பேருக்கு மாதம் ரூ. 2,000 ஓய்வூதியமாக இடது முன்னணி அரசு வழங்கி வருகின்றது.

இவையெல்லாம் மீண்டும் வெற்றிக்கு கைகொடுக்கும் என இடது முன்னணி கூட்டணி நம்பியிருக்கின்றது.

ஆனால், சபரிமலை தங்கக் கவசம் முறைகேடு வழக்கில் ஆளுங்கட்சித் தலைவர்கள், தேவஸ்தானத்தின் முன்னாள் நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சற்றுப் பின்னடைவாக அமைந்துள்ளது.

காங்கிரஸை பொருத்தவரை ஆட்சியில் இல்லாவிட்டாலும், அகில இந்திய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அடிக்கடி கேரளத்துக்கு பயணம் மேற்கொள்ளும் அவர்கள், கேரள மக்களுடன் பிணைப்புடன் இருப்பது பலம் சேர்க்கிறது. முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணி கூடுதல் பலம்.

ஆனால், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் களம் காண்பது பின்னடைவாக அமைந்துள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் வி.டி. சதீஷனுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் செயல்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கேரளத்தில் செல்வாக்கு மிக்க நாயர், ஈழவர் உள்ளிட்ட ஹிந்து சமூகத்தினரிடையே பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. கிறிஸ்துவர்களையும், குறிப்பாக மலை மாவட்டங்களில் உள்ள திருச்சபைகளின் ஆதரவு பெற்ற விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பாஜக பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஹிந்து சமூகத்தினரின் வாக்குகளைப் பெற - ஆளுங்கட்சிக்கு எதிராக - சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, தங்கக் கவசம் மோசடி விவகாரங்களைத் தேர்தல் களத்தில் பிரசார ஆயுதமாக பாஜக பயன்படுத்தி வருகின்றது.

இருப்பினும், கேரளத்தில் 26 சதவீதத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இஸ்லாமியர்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்குமா? கிறிஸ்துவர்களை ஈர்க்க பல்வேறு உத்திகளை பயன்படுத்தினாலும் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

போர் எதிரொலிக்குமா?

ஈரான் போரால் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்த நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்த சுமார் 35 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வாக்களிக்க கேரளத்துக்கு வருவார்களா? என்பது சந்தேகமே.

மேலும், பாலஸ்தீனம், ஈரான், லெபனான் போன்ற இஸ்லாமிய நாடுகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இஸ்லாமிய நாடுகள் மீதான தாக்குதல்களை கண்டிக்கத் தவறியதாக மத்திய பாஜக அரசின் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

மேலும், கேரளத்தில் பாஜகவுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று 'ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்' (கேரள பிரிவு) முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள்

கண்ணூர் மாவட்டம், தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாவது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். எர்ணாகுளம் மாவட்டம் பரவூரில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் போட்டியிடுகிறார்.

கண்ணூர் மாவட்டம் பேரவூரில், கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுடன் நேருக்கு நேர் மோதுகிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம் நேமத்தில் பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியை எதிர்கொள்கிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம் கழக்கூட்டம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன், முன்னாள் தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை எதிர்கொள்கிறார்.

கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் தொகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சரும், முதல்வர் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் போட்டியிடுகிறார்.

வயது மற்றும் பதவிக் கால வரம்புகள் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுதாகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அம்பலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம். வி. கோவிந்தனுக்கு எதிராக வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அக்கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலக உறுப்பினர் டி. கே. கோவிந்தன், தளிப்பறம்பா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலானது மாநிலத்தின் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. மேற்கு வங்கம், திரிபுரா என அடுத்தடுத்து தனது எஃகு கோட்டையை இழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் கடைசி ஆட்சி அதிகாரம். நாட்டில் கட்டெறும்பாக தேயும் காங்கிரஸின் மீண்டெழுவதற்கான வாய்ப்பு. தெற்கில் ஆழமாக கால் பதிப்பதற்கான பாஜகவின் முயற்சி.

கேரள மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? மே 4 தெரியவரும்..!

Summary

Kerala: Will Congress win? Or is Pinarayi 3.0 possible?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.