இன்று (ஏப்ரல் 9) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் மட்டுமல்லாமல், மூன்றாவது அணியாக களமிறங்கியிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் முக்கியமானதாக மாறியிருக்கிறது. மூன்றாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டின் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெறுமா? கடந்த இரண்டு தேர்தல்களில் கோட்டை விட்ட வெற்றியை இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மீட்டெடுக்குமா? கேரள அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தடம் பதிக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
தேசிய அளவிலான "இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்டும், காங்கிரஸýம் கேரளத்தில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுவதும், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இரு கட்சிகளும் பரஸ்பரம் ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருவதும் தேர்தல் விநோதங்களில் ஒன்று. இதைச் சுட்டிக்காட்டி பரப்புரையில் பாஜக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மார்க்சிஸ்ட், காங்கிரஸ் இரு கட்சிகள் தரப்பிலும் பதில் இல்லை.
பாஜகவுடன் மார்க்சிஸ்டுக்கு மறைமுகத் தொடர்பு இருப்பதாக காங்கிரஸýம், பாஜகவுடன் காங்கிரஸýக்கு மறைமுகத் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்டும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் தேர்தல் பரப்புரையின்போது இது தொடர்பாக வார்த்தைகளில் மோதிக்கொண்டது நகைப்பை வரவழைக்கிறது.
2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் மார்க்சிஸ்டுக்கு ஏற்பட்ட தோல்வி, கடந்த 40 ஆண்டுகளில் அந்தக் கட்சி சந்தித்திராதது. மேலும், கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மார்க்சிஸ்டுக்கு திருப்திகரமான வெற்றி கிடைக்காதது, இந்தப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
சபரிமலை தங்கக் கவச மோசடி தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு அழுத்தம் தருகிறது என காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே குற்றஞ்சாட்டுகின்றன. தேர்தல் நேரத்தில் பூதாகரமாக எழுந்துள்ள சபரிமலை தங்கக் கவச மோசடி விவகாரம் மார்க்சிஸ்டுக்கு நிச்சயம் பின்னடைவுதான்.
கடந்த 2021 பேரவைத் தேர்தலின்போது அளித்த 900 வாக்குறுதிகளில் 97 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். "லைஃப்' திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் வீடு இல்லாத 5 லட்சம் குடும்பத்தினருக்கு வீடு கட்டிக்கொடுத்ததை தனது சாதனைத் திட்டமாகப் பார்க்கிறது ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி. "மிகக் கடுமையான ஏழ்மையை' மாநிலத்திலிருந்து அகற்றிவிட்டதாக அறிவித்து, அதையும் ஒரு சாதனையாக முன்னிறுத்துகிறது. மாதந்தோறும் சமூகநல ஓய்வூதியம் ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.
கேரளத்தில் 1977-ஆம் ஆண்டுமுதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருந்தது இல்லை. ஆதலால், இந்தத் தேர்தல் காங்கிரஸýக்கு ஓர் அக்னி பரீட்சை.
உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற அமோக வெற்றி, தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை, சபரிமலை தங்கக் கவச மோசடியில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் போன்றவற்றால் தங்களது வெற்றி எளிதாக இருக்கும் என காங்கிரஸ் கருதுகிறது. அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை, மூத்த குடிமக்கள் நலனுக்கு தனித் துறை உள்ளிட்ட வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அளித்திருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி, குறிப்பாக தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றியிருப்பதன்மூலம் உற்சாகமாக களத்தில் உள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. நகர்ப்புற பகுதிகளில் உள்ள செல்வாக்கை அதிகப்படுத்தி சட்டப்பேரவைத் தேர்தலில் சில இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக உள்ளது. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ், மார்க்சிஸ்டின் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவும் அக்கட்சி வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
தொடர்ந்து இல்லாவிட்டாலும், கேரளத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் இ.கே.நாயனார். கேரளத்தின் நீண்ட கால (11 ஆண்டுகள்) முதல்வராக இருந்தவர் என்கிற சாதனையும் அவருக்கு உண்டு. தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருக்கும் பினராயி விஜயன், நாயனாரின் சாதனையை விஞ்ச வேண்டுமானால் இந்த முறையும் அவரது ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.
ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து இடதுசாரிகள்; உயிர்தெழுப்புக்காக காத்திருக்கும் காங்கிரஸ்; மாற்று சக்தியாக களமிறங்கியிருக்கும் பாஜக-இந்த மும்முனைப் போட்டியின் முடிவை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்: பிரதமா் மோடி வாக்குறுதி

பாஜகவின் வெற்றி ரகசியம்!

கேரளம்: காங்கிரஸ் கைப்பற்றுமா? அல்லது பினராயி 3.0 சாத்தியமா?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


